மேலும் செய்திகள்
கல் குவாரிக்கு எதிர்ப்பு 380 பேர் கைது
04-Oct-2025
மதுரை : கல் குவாரிக்கு எதிராக போராடிய அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் உட்பட 380 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே திருமால் கிராமத்தில் விதிமீறி கல் குவாரிகளில் வெடி வைத்து தகர்ப்பதால், வீடு களில் விரிசல் ஏற்படுகிறது. மண், துகள்கள், துாசிகளால் முதியோர், குழந்தைகளுக்கு ஆஸ்துமா பாதிப்பு ஏற்படுகிறது. அதனால், குவாரி அனுமதியை உடனே ரத்து செய்ய வேண்டும் என, அப்பகுதியினர் ஒன்பது நாட்களாக போராடி வருகின்றனர். இப்பிரச்னையில் விவசாய நிலங்களும் பாதிக்கப்படுவதாக கூறி, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் நேற்று கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு புறப்பட்டனர். ஐந்து லாரிகள், இரு வேன்களில் கருப்பு கொடிகள், கண்டன பதாகைகளை ஏந்திச் சென்றனர். திரண்டு வந்த அவர்களை கலெக்டர் அலுவலகத்திற்கு முன்பே, அண்ணா பஸ் ஸ்டாண்ட் அருகே போலீசார் தடுத்தனர். பின், நடந்து சென்ற மக்கள், கலெக்டர் அலுவலகம் முன் சாலையில் அமர்ந்தனர். இதனால், கலெக்டர் அலு வலக கேட் பூட்டப்பட்டது. அங்கே அமர்ந்து, ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை களை கலெக்டரிடம் ஒப்படைப்பதாக கோஷம் எழுப்பினர். இதில், 4 பெண் கள் மயங்கினர்; அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பேச்சு நடத்த டி.ஆர்.ஓ., அன்பழகன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சந்திரசேகரன், ஆர்.டி.ஓ., கருணாகரன் உள்ளிட்ட அதிகாரிகள் சென்றனர். பத்து பேர் மட்டும் கலெக்டரை சந்தித்து மனு அளிக்க அறிவுறுத்தினர். பொதுமக்கள் மறுத்ததால், போராட்டம் முடியவில்லை. உதயகுமார் உட்பட 380 பேர் கைது செய்யப்பட்டனர்.
04-Oct-2025