மாஜி அமைச்சர் வீரமணி சுப்ரீம் கோர்ட்டில் மனு
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய மறுத்த, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த 2021, தமிழக சட்டசபை தேர்தலில் ஜோலார்பேட்டை தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தேர்தல் கமிஷனில் அவர் தாக்கல் செய்த ஆவணங்களில், தன் சொத்து விபரங்களை குறைத்து தவறான தகவல்களை தெரிவித்ததாக, வேலுாரைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், திருப்பத்துார் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், கோர்ட்டில் விசாரணைக்காக நேரில் ஆஜராக விலக்கு அளிக்கக் கோரியும் கே.சி.வீரமணி தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை வீரமணி தாக்கல் செய்துள்ளார் - டில்லி சிறப்பு நிருபர் - .