சாம்சங் நிறுவன முன்னாள் அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை மோசடி வழக்கில் தீர்ப்பு
சென்னை:முதலீடு செய்யும் பணத்திற்கு, 2 சதவீதம் வட்டி தருவதாக, 2.60 கோடி ரூபாய் மோசடி செய்த, 'சாம்சங்' நிறுவன முன்னாள் அதிகாரி உட்பட நான்கு பேருக்கு, எழும்பூர் நீதிமன்றம், மூன்றாண்டு சிறை தண்டனை மற்றும் தலா, 4,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.சென்னையை சேர்ந்தவர் ஹேமந்த் குமார்; தொழிலதிபர். இவருக்கு, 2021ல், 'சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ்' என்ற நிறுவனத்தின் துணை தலைவராக இருந்தவரான வி.எல்.நாராயண் அறிமுகம் கிடைத்தது.அவர், 'ஐ2 டிஸ்ட்ரிபூஸன்' என்ற நிறுவனத்தில் முதலீடு செய்தால், 2 சதவீதம் வட்டி தருவதாக கூறியுள்ளார். அந்நிறுவனத்தின் பங்குதாரர்களாக இருந்த வி.எல்.நாராயணனின் கூட்டாளிகளும் வட்டி கொடுக்க சம்மதம் தெரிவித்தனர், அவர்களை நம்பி ஹேமந்த் குமார், 2.60 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார். அந்த தொகையை மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில்,ஹேமந்த் குமார் புகார் அளித்தார். மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, வி.எல்.நாராயண் மற்றும் அவரின் கூட்டாளிகளை கைது செய்தனர்.இதுதொடர்பான வழக்கு விசாரணை, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் தகுந்த சாட்சிகளுடன் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், வி.எல்.நாராயண் உள்ளிட்ட நான்கு பேருக்கு, மூன்றாண்டு சிறை தண்டனையும், தலா, 4,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.