சென்னை:காந்தியின் 77வது நினைவு தினம், அனுஷ்டிக்கப்பட்டது.தமிழக அரசு சார்பில், சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில், காந்தி சிலைக்கு கீழ், அவரது உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. காந்தி படத்திற்கு, கவர்னர் ரவி, அமைச்சர்கள் சாமிநாதன், சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், தமிழ் வளர்ச்சித் துறை செயலர் சுப்பிரமணியன், இயக்குனர் மோகன் ஆகியோர் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.அதன்பின், காந்தி மண்டபம் சென்ற கவர்னர், பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து, அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த, காந்தி படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார். மாணவ, மாணவியர் நடத்திய பஜனையிலும் பங்கேற்றார்.அரசு அலுவலகங்களில், நேற்று தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. சென்னை, எழிலகத்தில் வணிக வரி ஆணையர் ஜகந்நாதன் தலைமையில், ஊழியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். சுற்றுலா துறை
சென்னை வாலாஜா சாலையில் உள்ள தமிழக சுற்றுலா துறை அலுவலகத்தில், தீண்டாமை ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. அதில், அமைச்சர் ராமச்சந்திரன், 'நம் அரசியல் சட்டப்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது என்பதை அறிவேன். தீண்டாமையை அடிப்படையாக கொண்டு, எவர் மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை, மனம், வாக்கு, செயல் என, எந்த வகையிலும் கடைப்பிடிக்கமாட்டேன் என்று, உளமார உறுதியளிக்கிறேன்' என்ற உறுதிமொழியை வாசிக்க, துறையின் மேலாண் இயக்குனர் காகர்லா உஷா உள்ளிட்ட அதிகாரிகளும், அலுவலர்களும் உறுதிமொழி ஏற்றனர். உறுதிமொழி
தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலயத்தில், நேற்று காந்தி நினைவு தினத்தை ஒட்டி, மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, உதயநிதி, தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி, தலைமை நிலைய செயலர் பூச்சி முருகன் உள்ளிட்டோர் உறுதிமொழி ஏற்றனர்.