மலைகளில் மண் சரிவை தடுக்க புவி தொழில்நுட்ப மையங்கள் கனிமவளத்துறை நடவடிக்கை
சென்னை: மலைப்பகுதிகளில், மண் மற்றும் பாறைகள் சரிவதை தடுப்பதற்காக, புவி தொழில்நுட்ப மையங்கள் ஏற்படுத்த, கனிமவளத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் கோவை மாவட்டம் வால்பாறை, நீலகிரி மாவட்டம் ஊட்டி, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், சேலம் மாவட்டம் ஏற்காடு போன்ற இடங்களில், நிலச் சரிவை தடுக்க ஆய்வு பணிகள் துவங்கியுள்ளன. அதேநேரத்தில், பிற மாவட்டங்களில் உள்ள மலைப்பாங்கான இடங்களிலும், மண், பாறை சரிவுகள் ஏற்படுவது சமீப காலமாக அதிகரித்துள்ளன. குறிப்பாக, திருநெல்வேலி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, தென்காசி, கன்னியாகுமரி, சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களில், மண், பாறை சரிவுகள் ஏற்பட வாய்ப்புஉள்ளதாக தெரியவந்து உள்ளது. இந்த விபரங்களை அடிப்படையாக வைத்து, கனிமவளத்துறை மண் சரிவை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.இதுகுறித்து, கனிமவளத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:மலைப்பகுதிகளில் குவாரிகள் தொடர்பான விஷயங்களுக்கு அப்பால், வேறு சில பிரச்னைகளையும் கவனிக்க வேண்டியுள்ளது. அந்த வகையில், மண், பாறை சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ள இடங்களை கண்டறிந்து, தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க திட்டமிட்டுள்ளோம்.திண்டுக்கல் மாவட்டத்தில் முதற்கட்டமாக, ஒரு உதவி இயக்குநர் மற்றும் ஒரு புவியியலாளர் அடங்கிய, புவி தொழில்நுட்ப மையம் ஏற்படுத்தப் பட்டது. இதையடுத்து, திருநெல்வேலி, திருவண்ணாமலை மாவட்டங்களில், புவி தொழில்நுட்ப மையங்கள் ஏற்படுத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நடப்பு நிதியாண்டில், 37 லட்சம் ரூபாய் செலவில், இந்த மையங்கள் அமைக்கப்படும். அந்தந்த மாவட்டங்களில், மலைப்பகுதிகளை முழுமையாக ஆய்வு செய்து, மண், பாறை சரிவை தடுப்பதற்கான நடவடிக்கைகள், இம்மையம் வாயிலாக எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.