போஸ்டர்கள், பேனர்களில் ஜி.கே.மணி படம் கட்டாயம்!
சென்னை:'பா.ம.க., போஸ்டர்கள், பேனர்கள், துண்டு பிரசுரங்களில், ஜி.கே.மணி படம் இடம்பெற வேண்டும்' என, மாநில, மாவட்ட நிர்வாகிகளுக்கு, அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக, பா.ம.க., நேற்று வெளியிட்ட அறிவிப்பில், 'கட்சி நிகழ்ச்சிகள் தொடர்பான துண்டு பிரசுரங்கள், பேனர்கள், போஸ்டர்கள் அனைத்திலும், நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி, கவுரவத் தலைவர் ஜி.கே.மணி ஆகியோரின் படங்கள் இடம்பெற வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.நீண்ட காலம் பா.ம.க., தலைவராக இருந்த ஜி.கே.மணி மாற்றப்பட்டு, கடந்த 2022 மே 28ல் அன்புமணி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே நாளில் ஜி.கே.மணியை, கட்சியின் கவுரவத் தலைவராக, ராமதாஸ் அறிவித்தார்.அன்புமணி தலைவரானதும், ஜி.கே.மணியின் முக்கியத்துவம் குறைந்தது. கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் ராமதாசுக்கு அடுத்து அன்புமணியை மட்டுமே முன்னிறுத்தினர். போஸ்டர்கள், பேனர்களில் ராமதாஸ், அன்புமணியின் படங்கள் மட்டுமே இடம்பெற்றன.அன்புமணி தலைவரானதும், அவர் வகித்த வந்த பா.ம.க., இளைஞரணி தலைவர் பதவி, ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரனுக்கு வழங்கப்பட்டது. அன்புமணி ஆதரவாளர்களின் எதிர்ப்பால், சில மாதங்களிலேயே இளைஞரணி தலைவர் பதவியை, தமிழக்குமரன் ராஜினாமா செய்தார்.தான் தலைவரான பிறகும் ஜி.கே.மணிக்கு ராமதாஸ் மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதும், அவரிடம் ஆலோசித்து நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் எடுப்பதும், அன்புமணிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இதனால் கட்சி போஸ்டர்கள், பேனர்கள் எதிலும் ஜி.கே.மணியின் படத்தை போடுவதில்லை. இது குறித்து தன் வருத்தத்தை ராமதாசிடம் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்தே, இந்த உத்தரவு வெளியாகி இருப்பதாக, அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.***