சென்னை: குறுவை தொகுப்பு திட்டம் உட்பட, மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு, 182 கோடி ரூபாயை அரசு ஒதுக்கி உள்ளது.தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், குறுவை தொகுப்பு திட்டம், ஒவ்வொரு ஆண்டும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு தேவையான சாகுபடி உதவிகள் வழங்கப்படுகின்றன. 'இந்த ஆண்டு அனைத்து மாவட்டங்களிலும், குறுவை தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படும்' என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, டெல்டா மாவட்டத்திற்கு 58 கோடி; டெல்டா அல்லாத பிற மாவட்டங்களுக்கு, 102 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்நிதியில்,விவசாயிகள் இயந்திர நடவு செய்வதற்கு மானியம், தரமான விதைகள் வழங்கப்பட உள்ளன.இதேபோல, நெல் பயிருக்கு மாற்றாக சிறுதானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் சாகுபடியை ஊக்குவிக்கும் திட்டம், பருத்தி உற்பத்தியை பெருக்கும் திட்டம், இயற்கை விவசாயிகளை ஊக்குவிக்கும், 'நம்மாழ்வார் விருது' வழங்கும் திட்டம் உள்ளிட்டவற்றுக்கும் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.அதாவது, மாநில வேளாண் வளர்ச்சி திட்டம் என்ற பெயரில், 234 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. இதில் முதற்கட்டமாக, 182 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. மேலும், 2024-25ம் ஆண்டு செலவிடப்படாத 2.34 கோடி ரூபாயை, நடப்பாண்டு செலவு செய்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.மாநில வேளாண் வளர்ச்சி திட்ட நிதியை செலவிட, வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டு உள்ளன. இதற்கான அரசாணையை, வேளாண்துறை செயலர் தட்சிணாமூர்த்தி வெளியிட்டுள்ளார்.