சென்னை,:இலவச மற்றும் மானிய விலை மின்சாரத்துக்கு, வரும் நிதியாண்டிற்கு மின் வாரியத்திற்கு, 16,274 கோடி ரூபாய் வழங்க, தமிழக அரசுக்கு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் வீடுகளுக்கு, 100 யூனிட் வரை இலவசமாகவும், 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் வழங்கப்படுகிறது.குடிசை வீடுகள், விவசாயத்திற்கு முழுதும் இலவச மின்சாரமும், விசைத்தறி உள்ளிட்ட பிரிவுகளுக்கும் மானிய விலையிலும் மின்சாரம் வழங்கப்படுகிறது.இதற்காக, மின் வாரியத்திற்கு ஏற்படும் செலவை, தமிழக அரசு மானியமாக வழங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு மானிய தொகை வழங்க வேண்டும் என்பதை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மதிப்பீடு செய்து அரசுக்கு உத்தரவிடுகிறது. அதற்கு ஏற்ப, அந்த தொகை மின் வாரியத்திற்கு, ஒவ்வொரு காலாண்டிற்கும் வழங்கப்படுகிறது. அதன்படி வரும், 2025 -- 2026ம் நிதியாண்டிற்கு, 16,274 கோடி ரூபாய் வழங்க, மின்சார ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. இதில், வீடுகளுக்கான மானியம், 7752 கோடி ரூபாய்; விவசாயத்திற்கு, 7047 கோடி; குடிசை வீடுகளுக்கு, 360 கோடி; வழிபாட்டு தலங்களுக்கு 20 கோடி; விசைத்தறிக்கு 560 கோடி; கைத்தறிகளுக்கு 15 கோடி; தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கு 398 கோடி; அடுக்குமாடி குடியிருப்புகளின் பொது மின் இணைப்பு களுக்கு, 49 கோடி ரூபாய் அடங்கும்.