உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கழிப்பறையை சுத்தம் செய்யும் அரசு பள்ளி மாணவர்கள் * சீமான் குற்றச்சாட்டு

கழிப்பறையை சுத்தம் செய்யும் அரசு பள்ளி மாணவர்கள் * சீமான் குற்றச்சாட்டு

சென்னை:அரசு பள்ளிகளில் துாய்மை பணியாளர்கள் நியமிக்காமல், மாணவர்களை வைத்து கழிப்பறை சுத்தம் செய்யப்படுவதாக, சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.அவரது அறிக்கை:பள்ளி கல்வித் துறையின் கீழ், 37,579 அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன. பள்ளி வகுப்பறை, கழிப்பறை சுத்தப்படுத்துதல் பணிக்கு, கிராம வறுமை ஒழிப்பு சங்கம் வாயிலாக துாய்மை பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். அவர்களுக்கான மாதச் சம்பளம், துாய்மை பணிக்கான மூலப்பொருட்கள் வாங்குவதற்கு, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் நிதி ஒதுக்கப்படுகிறது.அதன்படி, தொடக்கப் பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்ய, 1,000 ரூபாய், நடுநிலைப் பள்ளிக்கு, 1,500 ரூபாய், உயர்நிலைப் பள்ளிக்கு, 2,250 ரூபாய், மேல்நிலைப் பள்ளிக்கு, 3,000 ரூபாய் வழங்கப்படுகிறது. ஆனால், தி.மு.க., ஆட்சியில் பல ஆயிரம் அரசு பள்ளி துாய்மை பணியாளர்களுக்கு, மாதச் சம்பளம் வழங்கப்படவில்லை. பல இடங்களில் மிக குறைவாக வழங்கப்படுகிறது. ஓய்வுபெற்ற இடங்களில், அப்பணியிடங்கள் நிரப்பப்படாததால், பெரும்பாலான இடங்கள் காலியாக உள்ளன. ஆசிரியர்கள் சொந்த செலவில் சுத்தம் செய்கின்றனர். சில பள்ளிகளில், மாணவர்களிடம் கட்டணம் வசூலித்து, கழிப்பறை சுத்தம் செய்யப்படுகிறது. மாணவர்களே சுத்தம் செய்யும் அவல நிலையும் உள்ளது. பள்ளிகளில் அடிப்படை மனித தேவையான, கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர முடியாத அரசு, வளர்ச்சி, முன்னேற்றம், சாதனை என்றெல்லாம் பேசுவது வெட்கக்கேடானது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ