தற்காலிக ஆசிரியர் நியமிக்க அரசு பள்ளிகளுக்கு அனுமதி
நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, அரசு பள்ளிகளில், 10, பிளஸ் 2 வகுப்புகளில் காலி பணியிடங்களுக்கு, தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். நடப்பாண்டில் ஓய்வுபெற்ற ஆசிரியர்களால், 5,000க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாகியுள்ளன. இதற்கு நிரந்தர ஆசிரியர் நியமிக்க, பல மாதங்கள் அவகாசம் தேவைப்படும். அதேபோல் ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்துவதில் தாமதம் ஏற்பட்டதால், பள்ளிகளில் மாணவ - மாணவியரை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்துவதில் சிக்கல் உருவானது. இதை கருத்தில் கொண்டு, பள்ளி துவங்கும் முன் தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என, தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதுகுறித்து, மே 28ல், நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் அறிவுறுத்தலின்படி, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், பள்ளி மேலாண்மை குழு வாயிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக்கொள்ள, தலைமை ஆசிரியர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், முழு கல்வி தகுதி கொண்ட ஆசிரியர்களை புகார் எழாதபடி நியமித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது - நமது நிருபர் -.