சொத்து பத்திரத்தில் ஜி.பி.எஸ்., புகைப்படம் இணைப்பதில் சிக்கல்: அரசு மாற்று வழி கண்டறிய வலியுறுத்தல்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: பத்திரங்களில் சம்பந்தப்பட்ட சொத்து குறித்த, புவியிட தகவல் அமைப்பு எனப்படும், ஜி.பி.எஸ்., புகைப்படத்தை இணைக்க, தனியார் செயலிகளை பயன்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் எழுவதுடன், பாதுகாப்பு குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆவண எழுத்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் வீடு, மனை போன்ற சொத்துக்களை வாங்குவோர், அதற்கான பத்திரங்களை, சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்கின்றனர். இதில், எவ்வித முறைகேடும் நடக்க கூடாது என்பதற்காக, பதிவுத்துறை பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகளை அமல்படுத்தி உள்ளது. தீர்க்க ரேகை இதன்படி, பத்திரத்தில் குறிப்பிடப்படும் சொத்து, உண்மையிலேயே உள்ளதா என்பதை உறுதி செய்ய, அதன் ஜி.பி.எஸ்., புகைப்படத்தை இணைக்க பதிவுத்துறை சில ஆண்டுகளுக்கு முன் உத்தரவிட்டது. இந்த புகைப்படத்தில், சொத்தின் தற்போதைய நிலை தெரிய வருவதுடன், அதன் அட்சரேகை, தீர்க்கரேகை அடிப்படையில், அந்த இடத்தின் விபரங்கள் இடம் பெறும். அத்துடன் அந்த இடம் அமைந்துள்ள நகர் மற்றும் தெரு பெயரும், புகைப்படத்தில் இடம் பெற்றிருக்கும். வழக்கமான கேமராக்களில், இத்தகைய புகைப்படத்தை எடுக்க முடியாது என்பதால், இதற்கென சில மொபைல் போன் செயலிகள் உள்ளன. தனியார் நிறுவனங்களின் இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்து, அதன் வாயிலாக சொத்தின் ஜி.பி.எஸ்., புகைப்படம் எடுக்கப்படுகிறது. இந்த புகைப்படங்கள், பத்திரப்பதிவின் போது ஆய்வுக்கு உட்படுத்தப்படும். உண்மையில் சொத்து குறித்த விபரங்கள், பத்திரத்தில் இடம் பெறுவது, அதை வாங்கும் மக்களுக்கு கூடுதல் பாதுகாப்பை ஏற்படுத்தும். ஆனால், இந்தப் புகைப்படம் எடுப்பதில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. பிரத்யேக செயலி இதுகுறித்து, ஆவண எழுத்தர்கள் கூறியதாவது: பத்திரத்தில் இணைப்பதற்காக, ஜி.பி.எஸ்., புகைப்படம் எடுப்பது தொடர்பாக, மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. பத்திரம் தயார் செய்வோர் தான், இதற்கு உதவ வேண்டியுள்ளது. குறிப்பாக, இத்தகைய புகைப்படங்கள் எடுக்க, அரசு தரப்பில் எந்த செயலியும் இல்லை. தனியார் நிறுவனங்களின் செயலியை பயன்படுத்தும் போது பாதுகாப்பு குறைபாடு ஏற்படுகிறது. குறிப்பாக, மக்கள் இதை பயன்படுத்தி புகைப்படம் எடுக்கும் போது, அவர்களின் தனிப்பட்ட விபரங்கள், வெளியாட்களுக்கு செல்லும் நிலை உள்ளது. அத்துடன் தேவையில்லாத பல்வேறு தகவல்கள், அவர்களின் மொபைல் போனில் தானாக பதிவிறக்கமாகிறது. எனவே, இந்த விஷயத்தில், நம்பகமான, பாதுகாப்பான முறையில் எந்தச் செயலியை பயன்படுத்த வேண்டும் என, பதிவுத்துறை உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் அல்லது பிரத்யேக செயலியை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து பதிவுத்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், 'பத்திரங்களில் ஜி.பி.எஸ்., புகைப்படம் இணைக்க, பாதுகாப்பான செயலியை பரிந்துரைக்க முடியுமா, அதற்கான வழிமுறைகள் என்ன என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம்' என்றார்.