குடியரசு தின விழா சாதனையாளர்களுக்கு விருது கொடி ஏற்றினார் கவர்னர் ரவி
சென்னை: தமிழக அரசு சார்பில், 76வது குடியரசு தின விழா, சென்னையில் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.நாட்டின், 76வது குடியரசு தின விழா கொண்டாட்டம், சென்னை காமராஜர் சாலையில், உழைப்பாளர் சிலை அருகே, ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. விழாவில் பங்கேற்க, முதல்வர் ஸ்டாலின் காலை 7:52 மணிக்கு வந்தார். அவரது காரின் முன்பும், பின்பும், தமிழக போக்குவரத்து காவலர்கள், மோட்டார் சைக்கிளில் அணிவகுத்து வந்தனர்.கவர்னர் ரவி, 7:54 மணிக்கு வந்தார். அவர் வாகனம் முன்பு, விமானப்படை வீரர்கள், மோட்டார் சைக்கிளில் வந்தனர்.இருவரும் சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு, மேடைக்கு சென்றனர்.முதல்வர் ஸ்டாலினை, தலைமைச் செயலர் முருகானந்தம் வரவேற்றார்; முதல்வர் ஸ்டாலின் பூங்கொத்து வழங்கி கவர்னரை வரவேற்றார். தென்னிந்திய பகுதிகளின் தலைமை படைத் தலைவர் கே.எஸ்.பிரார், தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்படை அதிகாரி சதீஷ் எம்.ெஷனாய், தாம்பரம் வான்படை நிலைய குரூப் கேப்டன் ரகுராமன், கடலோர காவல்படை காமாண்டர் டி.எஸ்.சைனி, தமிழக டி.ஜி.பி., சங்கர் ஜிவால், கூடுதல் டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம், சென்னை போலீஸ் கமிஷனர் அருண் ஆகியோரை, கவர்னருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார். அதைத் தொடர்ந்து, கவர்னர் ரவி தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். தேசிய கீதம் ஒலிக்க, இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் வாயிலாக, தேசியக் கொடி மீது மலர்கள் துாவப்பட்டன.அதன்பின் வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம், அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கான விருது, காந்தியடிகள் காவலர் பதக்கம் ஆகியவற்றை, விருதாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கி, அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.அடுத்து அணிவகுப்பு துவங்கியது. ராணுவம், கடற்படை, வான்படை, கடலோர காவல்படை, சி.ஆர்.பி.எப்., - சி.ஐ.எஸ்.எப்.,- ஆர்.பி.எப்., காவல்துறை, தமிழக பெண்கள் சிறப்பு காவல்படை, ஆயுதப்படை, தமிழக பேரிடர் மீட்பு படை, குதிரைப்படை, ஊர்காவல்படை.நீலகிரி படைப்பிரிவு, தமிழக வனத்துறை படைப்பிரிவு, சிறை படைப்பிரிவு, தீயணைப்பு துறை வீரர்கள், பள்ளி - கல்லுாரி என்.சி.சி., மாணவர்கள், என்.எஸ்.எஸ்., மாணவர்கள் அணிவகுத்து வந்தனர். கவர்னர் ரவி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து, அரசுத் துறை வாகனங்களின் அணிவகுப்பு நடந்தது.ஒவ்வொரு துறையின் சிறப்புகளையும், மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில், வாகனங்கள் வடிவமைக்கப்பட்டு இருந்தன.அணிவகுப்பை தொடர்ந்து, பள்ளி - கல்லுாரி மாணவியர், கிராமிய கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அதன்பின் தேசிய கீதம் இசைக்க, விழா நிறைவடைந்தது.விழாவில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள், கவர்னர் மனைவி லட்சுமி, முதல்வரின் மனைவி துர்கா, உயர் அலுவலர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
கவர்னர் அருகில் முதல்வர்
முதல்வர் ஸ்டாலின், கவர்னர் ரவி இடையே சமீப காலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. கவர்னர் தன் குடியரசு தின செய்தியில், தமிழக அரசின் செயல்பாடுகளை, கடுமையாக விமர்சித்து இருந்தார். இதற்கு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், பதில் அளித்திருந்தார். கவர்னர் ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக, தமிழக அரசு அறிவித்தது.இந்நிலையில், நேற்று குடியரசு தின விழாவில், கவர்னர், முதல்வர் பங்கேற்றனர். இருவரும் மேடையில் அருகருகே அமர்ந்திருந்தனர். எனினும் இருவரும் அதிகம் பேசிக் கொள்ளவில்லை.
ஜம்மு - காஷ்மீர் நடனம்
சென்னை, குடியரசு தின விழாவில், பள்ளி, கல்லுாரி மாணவியரின் கலை நிகழ்ச்சிகளுடன், கிராமிய கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அசாம் கலைக்குழுவின் பர்தோய் சிகாலா நடனம்; தெலுங்கானா மாநிலத்தின் மாதுரி நடனம்; ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் ரவுப் நடனம், தமிழகத்தின் ஜிக்காட்டம், கரகாட்டம், காவடியாட்டம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.