கிரீன் மேஜிக் பிளஸ் பால் விலை நிர்ணயம்
சென்னை:குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை தொடர்ந்து, 'வைட்டமின் ஏ மற்றும் டி' செறிவூட்டப்பட்ட 'கிரீன் மேஜிக் பிளஸ்' பாலை, ஆவின் நிர்வாகம் அறிமுகப்படுத்தி உள்ளது. சில்லரை தட்டுப்பாடு காரணமாக, அதன் விலை 450 மி.லி.,க்கு, 25 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.தமிழக அரசின் ஆவின் நிர்வாகம், பால் மற்றும் 200 வகையான பால் உப பொருட்கள் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. அதன்படி ஆண்டுக்கு, 30 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்படுகிறது.இந்நிலையில், ஆவின் பால் விற்பனையை, அனைத்து நகர மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விரிவாக்கம் செய்ய கூடுதலாக, 2 லட்சம் லிட்டர் பால் விற்பனையை அதிகரிக்க, ஆவின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.தற்போது, குழந்தைகள் மற்றும் பொது மக்கள் இடையே வைட்டமின் ஏ மற்றும் டி சத்து குறைபாடு இருப்பது பல்வேறு ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதற்கு ஏற்றவாறு, 4.5 கொழுப்பு சத்து மற்றும் 9 சதவீத இதர சத்துக்களுடன், வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்ட, கிரீன் மேஜிக் பிளஸ் என்ற புதிய வகையான பாலை, ஆவின் நிர்வாகம் அறிமுகப்படுத்தி உள்ளது.சில்லரை விற்பனையாளர்களுக்கு சற்று அதிக கமிஷனுடன் மற்றும் சில்லரை தட்டுப்பாடு ஏற்படாதவாறு, 450 மி.லி., பால், 25 ரூபாய் ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என, ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.