ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பால் விலைவாசி குறையும்: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை:'சரக்கு மற்றும் சேவை வரியான, ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பில், 5, 18 சதவீதம் என, இரு விதமான வரி விகிதங்கள் தான் இருக்கும். இதனால், விலைவாசி குறையும். இதை, மக்களிடம் விரிவாக எடுத்துக்கூற வேண்டும்' என, பா.ஜ., நிர்வாகிகளிடம், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்களே உள்ளன. அனைத்து கட்சிகளும், தேர்தல் ஆயத்த பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் சென்னை வந்தார். தமிழக பா.ஜ., மாநில நிர்வாகிகளுடன், சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்று காலை முக்கிய ஆலோசனை நடத்தினார். மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர் எச்.ராஜா, மாநில துணைத் தலைவர்கள், பொதுச் செயலர்கள், செயலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, நிர்மலா சீதாராமன் பேசியது குறித்து, பா.ஜ., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: ஜி.எஸ்.டி., விகிதங்களில் விரைவில் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது. அதில், 5, 18 சதவீதம் என, இரு விதமான வரி விகிதங்களே இருக்கும். இதனால், பொருட்களின் விலை குறையும். நாட்டில், 30 ஆண்டுகளுக்கு பின், விலைவாசி கணிசமாக குறைய உள்ளது. எனவே, ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பால் ஏற்பட உள்ள நன்மைகளை, தமிழக மக்களிடம் பா.ஜ.,வினர் விரிவாக எடுத்துக்கூற வேண்டும். மக்களுக்கு புரியும்படி பேச வேண்டும். கடந்த லோக்சபா தேர்தலின் போது, தமிழகத்தில் இருந்து பா.ஜ.,வுக்கு எம்.பி.,க்கள் கிடைப்பர் என, மேலிட தலைவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், ஒரு எம்.பி., கூட கிடைக்காததால் வருத்தம் அடைந்தனர். தேர்தலில் தீவிரமாக பணியாற்றாமல் வெற்றி கிடைக்காது. வரும் தமிழக சட்டசபை தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற, பா.ஜ., நிர்வாகிகள், தொண்டர்கள் கடுமையாக பணியாற்ற வேண்டும். மத்திய அரசு பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. இந்த திட்டங்களை, வீடு வீடாக சென்று மக்களிடம் பா.ஜ.,வினர் விளக்கமாக எடுத்துரைக்க வேண்டும். அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால், இந்திய நிறுவனங்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படாது. அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் மத்திய அரசு உறுதுணையாக இருக்கும். தமிழகத்தில் பா.ஜ., வளர்வதை யாராலும் தடுக்க முடியாது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசியதாக, நிர்வாகிகள் கூறினர்.