உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வழக்கில் நடவடிக்கை எடுக்காத டி.எஸ்.பி., - ஏ.சி.,யை சஸ்பெண்ட் செய்ய டி.ஜி.பி.,க்கு ஐகோர்ட் உத்தரவு

வழக்கில் நடவடிக்கை எடுக்காத டி.எஸ்.பி., - ஏ.சி.,யை சஸ்பெண்ட் செய்ய டி.ஜி.பி.,க்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் நடவடிக்கை எடுக்காத டி.எஸ்.பி., மற்றும் பாதிக்கப்பட்டோர் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய உதவி கமிஷனரை, 'சஸ்பெண்ட்' செய்யும்படி, டி.ஜி.பி.,க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் வானுார் பகுதியில் உள்ள, 12 ஏக்கர் நிலம் தொடர்பாக, ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த செந்தாமரை, மாற்று சமூகத்தை சேர்ந்த வீராசாமி இடையே பிரச்னை ஏற்பட்டது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், நிலம் செந்தாமரைக்கே சொந்தமானது என்று தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றமும், அந்த உத்தரவை உறுதி செய்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=r2unlpw5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், வேறு சமுதாயத்தை சேர்ந்த கேசவன் என்பவர், அந்த நிலத்துக்கு உரிமை கோரி, திண்டிவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அத்துடன் செந்தாமரை மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மிரட்டலும் விடுத்தார். இதுபற்றி, 2023ல் வானுார் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த ஆண்டு நிலத்தை பார்வையிட சென்ற, செந்தாமரையின் உறவினரை ஜாதி பெயரைச் சொல்லி திட்டி, கடுமையாக தாக்கி, மொபைல் போனை கேசவன் பறித்துள்ளார். ஜாதியை சொல்லி திட்டியதாக அளித்த புகார் மீது, வழக்குப் பதிவு செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால், கேசவன் தரப்பில் அளிக்கப்பட்ட புகார் மீது, ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, 'ஜாதி பெயரை சொல்லி திட்டி மிரட்டல் விடுத்த, கேசவன் மீது அளிக்கப்பட்ட புகார் மீது, உரிய நடவடிக்கை எடுத்து, குற்ற இறுதி அறிக்கை தாக்கல் செய்ய, கோட்டக்குப்பம் சரக டி.எஸ்.பி.,க்கு உத்தரவிட வேண்டும்' என, செந்தாமரை தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தே.அசோக்குமார், 'டி.எஸ்.பி., உரிய விசாரணை நடத்தாமல், ஒருதலைப் பட்சமாக செயல்படுகிறார்' என்று, தெரிவித்தார். உடன் நீதிபதி, உரிய நடவடிக்கை எடுக்காததுடன், வன்கொடுமை தடுப்பு சட்ட விதிமுறைகளை பின்பற்றாத டி.எஸ்.பி.,யை, 'சஸ்பெண்ட்' செய்து, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய, டி.ஜி.பி.,க்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.

92 சவரன் திருட்டு

சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் ஜிரினா பேகம்; சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'கணவர் இறந்து விட்ட நிலையில், 2018ல் மகள் திருமணத்திற்கு வாங்கிய, 92 சவரன் நகைகள் திருடு போய் விட்டன. இதுதொடர்பாக, சூளைமேடு போலீஸ் நிலையம், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தும் பலனில்லை. எட்டு ஆண்டுகளாக, போலீசார் தங்கள் கடமையை செய்ய தவறியதால், வழக்கை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற வேண்டும்' என்று கோரியிருந்தார். இந்த வழக்கு, நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகமது சபீத், ''நகையை மீட்பது தொடர்பாக, போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை,'' என்று தெரிவித்தார். வழக்கில், 2018 செப்டம்பர் முதல் தற்போது வரை, சூளைமேடு போலீஸ் நிலையத்தில், இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றியவர்கள் ஆஜராகினர். அப்போது நீதிபதி, 'குற்ற வழக்கு விசாரணை தொடர்பாக, போலீசாருக்கு அரசு முறையாக பயிற்சி அளிக்க வேண்டும். முறையான பயிற்சி இல்லாமல், கடமையை செய்ய தவறும் போலீஸ் அதிகாரிகளை, நீதிமன்றமே வெளியேற்றும் நடவடிக்கையை மேற்கொள்ளும்' என, எச்சரித்தார். பின், நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 'குற்றம் நடந்த காலத்திற்கு பின், சூளைமேடில் அதிக காலம் இன்ஸ்பெக்டராக பணியாற்றி, தற்போது, சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீஸ் உதவி கமிஷனராக பணியாற்றும் கர்ணனை, 'சஸ்பெண்ட்' செய்ய வேண்டும். 2018 செப்டம்பர் முதல் தற்போது வரை பணியாற்றிய ஆய்வாளர்கள் மீது, துறை ரீதியாக டி.ஜி.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உத்தரவிட்டார்.இதேபோல, சேலம் மாவட்டம் வீராணம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், தவணை முறையில் வீட்டுமனை வழங்குவதாக கூறி மோசடி செய்யப்பட்டது. இது குறித்து, 2018ல் அளிக்கப்பட்ட புகாரில், போலீசார் நடவடிக்கை எடுக்காத நிலையில், இன்ஸ்பெக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய மனுவும், நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது.அப்போது, 2018ல் இருந்து தற்போது வரை, வீராணம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர்கள் ஆஜராகினர். இந்த வழக்கிலும் நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க, டி.ஜி.பி.,க்கு நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

jayaraman
ஜூலை 16, 2025 10:05

திருடப்படும் நகைகளை பங்கு போட்டு கொண்டு அவர்கள் நம்மை ஸ்டேஷன், SP ஆபீஸ், டிஜிபி ஆபீஸ், வக்கீல், கோர்ட் என அலைய விடுவார்கள். கடைசியில் நகை மட்டுமில்லாமல் நம் நிம்மதியையும் தொலைத்து பைத்தியம் பிடித்து அலைய வேண்டியது தான்.


Thravisham
ஜூலை 16, 2025 08:39

ரௌடியிசம் தான் த்ரவிஷம். திருட்டு த்ரவிஷன்களுக்கு கமிஷன் கொள்ளை தான் குறி. நிர்வாகம் பற்றிய அறிவு இல்லவே இல்லை


Kalyanaraman
ஜூலை 16, 2025 08:27

மாவட்ட நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. இப்படி இருந்தும் காவல்துறையினர் நீதிமன்ற தீர்ப்பை மதிக்கவில்லை என்றால் நீதிமன்றங்களும் நமது சட்டங்களும் முதுகெலும்பற்ற நிலையில் இருப்பதே காரணம். உண்மையிலேயே கடும் தண்டனை இருந்தால் இவர்கள் இப்படி செய்வார்களா? இந்த உதவாக்கரை நீதிமன்றங்களுக்கும் சட்டங்களுக்கும் மக்கள் வரிப்பணம் எவ்வளவு செலவாகிறது? இந்த தீர்ப்பு கிடைப்பதற்கு பாதிக்கப்பட்டவர் எத்தனை முறை நீதிமன்ற படி ஏறி இருப்பார்? எவ்வளவு வக்கீல் பீஸ் கொடுத்திருப்பார்? இவ்வளவு செய்தும் பாதிக்கப்பட்டவருக்கு விடிவு இல்லை. அதென்ன துறை ரீதியான நடவடிக்கை? சாமானியன் குற்றம் செய்தால் என்ன தண்டனையோ அதைவிட ஆறு மடங்கு ஏழு மடங்கு அதிகபட்ச தண்டனை கொடுங்கள். சட்டத்தை காப்பாற்ற வேண்டிய காவல்துறையினர் சட்டத்தை காலில் போட்டு மிதிப்பதற்கு கடும் தண்டனை இல்லாததே மிக முக்கிய காரணம்.


Siva Balan
ஜூலை 16, 2025 07:53

நீதிமன்றம் சொல்வதுபோல் செய்தால் தமிழ்நாட்டில் ஒரு போலிசும் இருக்கமாட்டார்கள். போலிஸ் அமைச்சர் உள்பட...


Samy Chinnathambi
ஜூலை 16, 2025 06:36

இப்போ தான் நீதி மன்றமே வேலை செய்ய ஆரம்பிச்சு இருக்கு... கடமை தவறும் நீதிபதிகளை யார் சஸ்பெண்ட் செய்வது?


Varadarajan Nagarajan
ஜூலை 16, 2025 06:30

நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கை மிகவும் வரவேற்கத்தக்கது. பொதுமக்கள் அளிக்கும் புகார்கள்மீது தேவையான நடவடிக்கை எடுக்காமலும் ஆனால் அரசியல்வியாதிகள் அளிக்கும் புகார்கள்மீது அதீதமான உடனடி நடவடிக்கி எடுப்பதும் காவல்துறையில் பலகாலமாக நடந்துவருகிறது. பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நீதிமன்றத்தை நாடவேண்டியுள்ளது. இதனால் பணவிரயம் காலதாமதம் மனஉளைச்சல் ஏற்படுகின்றது. அதனால் பலர் நீதிமன்றத்தை நாடுவது தவிர்க்கின்றனர். பொதுமக்கள் கொடுக்கும் புகார்களுக்கு பாரபட்சம் இல்லாமலும் அரசியல் பின்புலம் பார்க்காமலும் சட்டப்படி காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு பலகாலம் ஆகிவிட்டது. தற்பொழுதாவது நீதிமன்றங்கள் அவர்கள்மீது கடுமையான நடவடிக்கையெடுப்பதால் காவல்துறை சீரடையுமா என பொறுத்திருந்துதான் பார்க்கணும்


சமீபத்திய செய்தி