உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இதய மருத்துவர்களின் இதயமே... இதயமே!:இன்று உலக இதய தினம்!

இதய மருத்துவர்களின் இதயமே... இதயமே!:இன்று உலக இதய தினம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இதய நோய்களைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.இந்த நாளில், கோவை இதய சிகிச்சை டாக்டர்கள் சிலரிடம், 'நோயாளிகளின் இதயம் காக்க, நீங்கள் போராடுகிறீர்கள்; உங்கள் இதயத்தை எப்படி பாதுகாக்கிறீர்கள், என்ன உணவு எடுத்துக்கொள்கிறீர்கள், என்ன வாழ்க்கை முறையை பின்பற்றுகிறீர்கள்...' என கேள்விகளை அடுக்கினோம்.இதை சிறிதும் எதிர்பார்க்காத டாக்டர்கள், புன்முறுவலுடன் தங்கள் அன்றாட உணவு, வாழ்க்கை முறையை பகிர்ந்து கொண்டனர். அதை, எங்கள் இதயத்துக்கு நெருக்கமான வாசகர்களான, நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள். இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுங்கள்!

'ஒரு மணி நேரம் உடற்பயிற்சி'

எனக்காக ஓய்வின்றி, வேலை செய்து கொண்டு இருக்கும் எனது இதயத்திற்கு, காலை எழுந்ததும் நெஞ்சில் கையை வைத்து, நன்றி தெரிவிப்பேன். மூன்று நேரமும் சரியான உணவு முறையை பின்பற்றுவேன். தினமும், 500 கிராம் காய்கறி, 500 கிராம் பழ வகை எடுத்துக் கொள்வேன். தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்வேன். கொழுப்பு உணவு பொருட்களை தவிர்த்து, புரத சத்துள்ள உணவு உண்பேன். யோகா, தியானம், மூச்சு பயிற்சி செய்வேன். இதை நான் தினமும் பின்பற்றி வருகிறேன்.- டாக்டர் பெரியசாமி, ஜே.கே.பி. மெடிக்கல் சென்டர்.

வறுத்த பூண்டு சாப்பிடுவேன்'

நான் காலை, 5:00 மணிக்கு எழுந்து விடுவேன். 45 நிமிடங்கள் யோகா செய்வேன். எங்களது நடன குரூப் வாயிலாக, ஆன்லைனில் சிறிது நேரம் நடனப் பயிற்சி செய்வேன். இதனால் மனம், தசைகள் லேசாகிறது. அதன் பின் நடைபயிற்சி. 8:00 மணிக்கு வெந்நீரில் குளித்து, 500 மில்லி லிட்டர் தண்ணீர் குடிப்பேன். பின், பூண்டை வறுத்து சாப்பிடுவேன். இதனை தினமும் நடைமுறைப்படுத்தி வருகிறேன்.- டாக்டர் கணேசன், உஷா தேவி கிளினிக், கணபதி.

'மன அழுத்தம் தவிர்க்கிறேன்'

எனது இதயத்தை பாதுகாக்க, உணவு முறையை சரியாக பின்பற்றி வருகிறேன். எண்ணெயில் உணவுகளை தவிர்த்து விடுகிறேன். மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்ள முயற்சி செய்கிறேன். அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொண்டு வருகிறேன். டயட்டை கடைப்பிடித்து வருகிறேன்.- டாக்டர் ராம்பிரகாஷ், ஜி.கே.என்.எம்., மருத்துவமனை

'மதியம் குட்டித்துாக்கம்'

நான் காலை, 4:00 மணிக்கு எழுந்து வீட்டிலேயே உற்சாகமாக உடற்பயிற்சி செய்வேன். தினந்தோறும் இதயத்திற்கு உடற்பயிற்சி அவசியம். காலை நேரத்தில் எளிதில் ஜீரணமாக கூடிய அளவான உணவுதான் சாப்பிடுவேன். 12:00 மணிக்கு கோதுமை வகை உணவு, சிறிது சாப்பாடு. 2:00 மணியளவில், 15 முதல், 20 நிமிடம் ஒரு துாக்கம் போடுவேன். ஓட்டல் உணவு சாப்பிடுவது இல்லை. மோர், இளநீர், பாதாம் கீர், ரோஸ் மில்க் எடுத்துக் கொள்வேன். மன அழுத்தம் ஏற்படுத்தும் செயல்களை செய்வது இல்லை. உப்பு அதிகம் எடுக்க மாட்டேன். குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவேன்.- டாக்டர் பக்தவத்சலம், சேர்மன், கே.ஜி.மருத்துவமனை

'இரவு 10 மணிக்கு உறக்கம்'

நான் காலை, 5:30 மணிக்கு எழுந்து ஒன்று முதல் இரண்டு மணி நேரம் உடற்பயிற்சி செய்வேன். காலை உணவாக புரோட்டின் வகை உணவு எடுத்துக் கொள்வேன். பணிக்கு வரும் போது, மதிய உணவை எடுத்து வந்துவிடுவேன். மாலை நேரத்தில் டீ, காபி, எண்ணெய் பதார்த்தங்களை எடுப்பது இல்லை. முடிந்த அளவு ஏதாவது பழ வகை சாப்பிடுவதுண்டு. வரும் முன் காப்போம் என்பதை கடைப்பிடிக்கிறேன். இரவு பணி இல்லாதபட்சத்தில், 10:00 மணிக்கு துாங்கி விடுவேன்.- டாக்டர் அருண் கவுசிக்பி.எஸ்.ஜி., மருத்துவமனை'

அடிக்கடி தண்ணீர் குடிப்பேன்'

தொடர்ந்து வேலை செய்யும் போது, இடையே சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொள்வேன். உடலில் உள்ள நீர் சத்து குறையாமல் இருக்க, அடிக்கடி தண்ணீர் குடிப்பதுண்டு. யோகா மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்வேன். அரை வயிறு சாப்பாடு, காய்கறி, பழ வகைகள் சாப்பிடுவதை பின்பற்றி வருகிறேன்.- டாக்டர் தியாகராஜன், ஜே.கே.பி., மெடிக்கல் சென்டர்.

'கொழுப்பு தவிர்க்கிறேன்'

இதயத்திற்கு மது, புகை பழக்கம் கூடாது. அதை நான் தவறாமல் கடைப்பிடிக்கிறேன். நீச்சல், சைக்கிள், நடைபயிற்சி இவற்றில் ஏதாவது உடற்பயிற்சியை வாரத்தில், 5 நாட்கள், 15 முதல், 20 நிமிடங்கள் செய்கிறேன். அளவான சாப்பாடு, நொறுக்குத் தீனி, கொழுப்பு நிறைந்த உணவு பொருட்கள், ரெட் மீட் வகைகளை தொடமாட்டேன். அரிசி வகைகளை தவிர்த்து, தானிய வகை உணவுகள், மீன் எடுத்துக் கொள்வேன். காலை உணவை தவிர்த்தது இல்லை. இரவு உணவை, 7:00 அல்லது 7:30 மணிக்குள் எடுத்து விடுவேன். டாக்டர் சுசீந்த் கண்ணா, முத்துாஸ் மருத்துவமனை

புரதம், நார்ச்சத்து எடுக்கிறேன்'

அரிசி, உப்பு, சர்க்கரை, மைதா போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது இல்லை. வாரத்தில், 4 முதல், 5 நாட்கள், 30 நிமிடங்கள் கட்டாயம் உடற்பயிற்சி மேற்கொள்வேன். 7 அல்லது 8 மணி நேரம் துாங்குவதை தினமும் பின்பற்றுகிறேன். கார்போஹைட்ரேட், கொழுப்பு உணவு பொருட்களும், உடலுக்கு அவசியம். அதனை குறைவாக எடுத்துக் கொண்டு புரதச்சத்து, நார்ச்சத்து அதிகம் உள்ள உணவு எடுத்துக்கொள்வேன். 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் அருந்துவேன். இளம் வயதில் மாரடைப்பு ஏற்பட, மன அழுத்தம்தான் முக்கிய காரணம். மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வேன். துாங்குவதற்கு 'ஸ்லீப் ஸ்டடி' மேற்கொள்கிறேன். ஆழ்ந்த துாக்கத்திற்கு, 'சிபேப் கருவி' பயன்படுத்துகிறேன்.- டாக்டர் ஆதித்யன், இருதயம் மற்றும் பொதுநலம், ஏ.ஜி.எஸ். கிளினிக்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ram pollachi
செப் 29, 2024 10:58

குக்கர் சாப்பாட்டை தவிர்த்து வடித்து சாப்பிடு, பல யோசனை கூடாது நடப்பது நடக்கட்டும் என்று மன திடத்துடன் இருந்தால் போதும் இதயம் பலப்படும்...


ஆரூர் ரங்
செப் 29, 2024 12:42

கேஸ் மின் அடுப்பு சமையல், கான்கிரீட் வீட்டு வாசம், பெட்ரோல் டீசல் வாகனங்களில் பயணம், உடலில் முக்கால்வாசிப் பகுதிகளை மூடிய ஆடைகள் தவிர்க்க வேண்டும். காட்டில் இயற்கையாக வளர்ந்த தாவரங்களை சமைக்காமலேயே உண்டு அவற்றின் இலை தழைகளை மட்டுமே அணிவது இன்னும் நல்லது.


S.Sivan
செப் 29, 2024 09:33

நல்ல பயனுள்ள தகவல், நன்றி


Kasimani Baskaran
செப் 29, 2024 06:34

யோகா மற்றும் அளவான சைவ உணவு இதயத்துக்கு நல்லது. எல்லாம் என் உணவு என்பது கேட்க நன்றாக இருக்கும் - வேறு விதமான சிக்கல்களைத்தான் கொண்டுவரும்.


புதிய வீடியோ