| ADDED : நவ 11, 2024 10:55 AM
சென்னை: வெப்ப அலையில் இருந்து தொழில் நிறுவனங்களை பாதுகாப்பது குறித்த பரிந்துரைகளை தமிழக திட்டக்குழு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மழை ஒருபுறம் பெய்தாலும், வெயிலின் தாக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்த வெப்ப அலைகளினால் தொழில் நிறுவனங்களும், அதன் ஊழியர்களும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். வெப்ப அலையின் காரணமாக, பணியிடங்களில் தொழிலாளர்களின் பணிநேரம், பணித்திறன் குறையும் அபாயம் உருவாகிறது. மேலும், இயந்திரங்களும் பழுது ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. இது போன்ற காரணங்களால் பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்படும் சூழல் உண்டாகிறது. எனவே, ஊழியர்களை பாதுகாக்கும் விதமாக, வெப்ப தணிக்கைக்கான யுக்திகள் குறித்து தமிழக திட்டக்குழு பல்வேறு பரிந்துரைகளை வழங்கியுள்ளது. பணியிடங்களை விதிகளுக்குட்பட்ட முறையில் பராமரிப்பதுடன், பணியாளர்களுக்கு ஓய்வுநேரம், குடிநீர், மருத்துவ வசதி, பணிநேர மாற்றுதல், சுழற்சி முறையில் பணிகள் உள்ளிட்டவையை ஏற்படுத்துவதன் மூலம் ஊழியர்கள் வெப்ப அலையில் இருந்து பாதிக்கப்படாமல் தற்காத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், பணியாற்றும் இடங்களில் சென்சார்களின் மூலம் வெப்ப அலையின் அளவை காண்காணித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். மேலும், வெப்ப அலை அதிகளவில் இருக்கும் போது, மின்தேவை அதிகரிக்கும். குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளை குளிர்ச்சிப்படுத்துவதற்கான மின்தேவையை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல, இந்த வெப்ப அலைகளினால் வனங்கள் மற்றும் சதுப்பு நிலங்களுக்கும் உள்ள சவால்கள் குறித்தும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.