சென்னை: மதுரையில் நேற்று முன்தினம் மூன்று மணி நேரத்தில், 16 செ.மீ., மழை கொட்டித் தீர்த்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், இன்றும், நாளையும், 12 முதல் 20 செ.மீ., வரையிலான அதிதீவிர கனமழை பெய்யும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதனால், இரண்டு நாட்களாக தமிழகம் கிடுகிடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வருகிறது; வடகிழக்கு பருவமழை துவங்குவதன் அறிகுறியாக, பரவலாக கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் உள் மாவட்டங்களின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=s7crthcf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதன் காரணமாக, நேற்று காலை 8:30 மணி வரையிலான, 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரையில், 16 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. அதுவும், மூன்று மணி நேரத்தில், இந்த அளவுக்கு மழை கொட்டித் தீர்த்துள்ளது.அடுத்தபடியாக, திருப்புவனம் - 14; சிவகாசி, மதுரை தல்லாகுளம், பெரியாபட்டி, ராமேஸ்வரம், தஞ்சை வெட்டிக்காடு பகுதிகளில், தலா, 12 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. சாதகமான சூழல்
இந்நிலையில், இன்றும், நாளையும் தமிழகத்தில், 17 மாவட்டங்களில் அதிதீவிர கனமழை பெய்யும் என்றும், வடகிழக்கு பருவமழை நாளை துவங்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. அந்த மையத்தின் தென்மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் அளித்த பேட்டி:தென்கிழக்கு வங்கக்கடலில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இதன் காரணமாக, தெற்கு வங்கக்கடலின் மையப்பகுதியில் இன்று புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம்.இந்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, மேற்கு, வடமேற்கு திசையில், தமிழக வடக்கு பகுதி, புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி அடுத்த, 48 மணி நேரத்தில் நகரக்கூடும்.தென்மேற்கு பருவக்காற்று பல்வேறு மாவட்டங்களில், இரண்டு நாட்களில் முழுமையாக விலகும். வங்கக்கடல், அரபிக்கடல் பகுதிகளில், ஒரே சமயத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சிகள், அவற்றுக்குள் ஏற்படும் பரிமாற்றம் காரணமாக, வடகிழக்கு பருவமழை துவங்க சாதகமான சூழல் நிலவுகிறது. எனவே, இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை நாளை துவங்கும். சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் இன்று முதல் கனமழை துவங்கும். தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரியிலும், இன்று இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இந்த நிலை, 18ம் தேதி வரை நீடிக்கலாம். ஆரஞ்ச் அலர்ட்
தமிழகத்தில், விழுப்புரம், கடலுார், அரியலுார், பெரம்பலுார், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய ஒன்பது மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று மிக கன மழைக்கான 'ஆரஞ்ச் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. அதாவது, 12 முதல் 20 செ.மீ., வரையில் அதிதீவிர கனமழை பெய்யலாம்.இதுதவிர, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று, 11 செ.மீ., வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளைய எச்சரிக்கை
வேலுார், திருப்பத்துார், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, அரியலுார், பெரம்பலுார், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலுார் ஆகிய எட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு, 'ஆரஞ்ச் அலெர்ட்' விடுக்கப்பட்டு உள்ளது. மீனவர்களுக்கு
தமிழக கடலோர பகுதிகள், குமரிக்கடல், மன்னார் வளைகுடா உள்ளிட்ட பகுதிகளில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு சூறாவளிக்காற்று வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.உஷார்படுத்திய அரசு
வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை அடுத்து, தமிழகம் முழுதும் கலெக்டர்களை அரசு உஷார்படுத்தியுள்ளது. மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படியும், மக்கள் பாதிக்காத வகையில் சிறப்பு ஏற்பாடுகளை செய்யும்படியும் தெரிவித்துள்ளது.
மழை பாதிப்பின் தன்மைக்கு ஏற்ப பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கவும், மாவட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
சென்னையில் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, துணை முதல்வர் உதயநிதி நேற்று சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் ஆய்வு நடத்தினார். 'சென்னையில் 20 செ.மீ.,க்கு மேல் மழை பெய்யும் என்ற தகவல் வந்துள்ளதால், பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து, பணிகளை மேற்கொள்ளுங்கள்' என, அவர் உத்தரவிட்டுள்ளார்.புயல் உருவாகும்!
வங்கக்கடலில் தற்போது உருவாகியுள்ள நிகழ்வுகள் காரணமாக, வரும் 17ம் தேதி வரை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு அதிக வாய்ப்புள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி, தமிழக கடலோரத்தை நெருங்கும் போது மழையின் தாக்கம் கடுமையாக இருக்கும். இன்று காலை அல்லது நண்பகலில், சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் கனமழை துவங்கி விடும். தற்போதைய நிலவரப்படி, வங்கக்கடலில் புதிதாக உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுவடையலாம்.புதுச்சேரி, மாமல்லபுரம், சென்னை, பழவேற்காடு, நெல்லுார், கவாலி ஆகிய இடங்கள், மழையால் பாதிக்கப்படும் முக்கிய இடங்களாக உள்ளன. கடலின் மேற்பரப்பில், 30 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெப்பம் அதிகரிக்கும் சூழலில், இந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாற வாய்ப்புள்ளது.- பிரதீப் ஜான், தமிழக வெதர்மேன்