பாம்பனில் கோளரங்கிற்காக நிலம் மாற்றம் உயர்நீதிமன்றம் தடை
மதுரை : ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் கோளரங்கம் அமைப்பதற்காக, மயான நிலத்தை வகை மாற்றம் செய்த தமிழக அரசின் உத்தரவிற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்தது.பட்டினம்காத்தான் நம்புராஜன் உட்பட 10 பேர் தாக்கல் செய்த பொதுநல மனு:
பாம்பனில் குறிப்பிட்ட சர்வே எண்ணிலுள்ள நிலத்தை அரசு கையகப்படுத்தியது. அதன் ஒரு பகுதியில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பகுதி தேசிய நெடுஞ்சாலைக்கு ஒதுக்கப்பட்டது. மற்றொரு பகுதியில் சுனாமி மறுவாழ்வு மையம், சமுதாயக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. எஞ்சிய பகுதியிலுள்ள மயானம், கோயில், தெப்பக்குளத்தை அகற்ற அரசு தரப்பில் முயற்சி நடந்தது.அரசு புறம்போக்கு மயானம் என்பதை அரசு புறம்போக்கு தரிசு நிலம் என வகை மாற்றம் செய்தது தமிழக வருவாய்த்துறை. மத்திய பொதுப்பணித்துறை, பாதுகாப்பு ஆராய்ச்சித்துறையிடம் ஒப்படைத்தது. கிராம மக்களிடம் கருத்து கோரவில்லை. தங்கச்சிமடம் ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றவில்லை.வகை மாற்றம் செய்யப்பட்ட நிலத்தில் கோளரங்கம், மாநாட்டு அரங்கம், உணவகம் மற்றும் கடை அமைக்கப்பட உள்ளது. அப்துல்கலாம் மீது கிராம மக்கள் மரியாதை வைத்துள்ளனர். அதனால்தான் அவருக்கு தேசிய நினைவிடம் அமைக்க தானாக முன்வந்து ஒப்புதல் அளித்தோம். தற்போது நிலத்தை வகை மாற்றம் செய்த விவகாரத்தில் அரசு தன்னிச்சையாக நடவடிக்கை எடுத்துள்ளது.கோளரங்கம் அமைப்பதற்காக நிலத்தை வகை மாற்றம் செய்த வருவாய்த்துறையின் அரசாணைக்கு தடை விதித்து ரத்து செய்ய வேண்டும். அந்நிலத்தை மக்கள் பயன்படுத்துவதை அரசு தரப்பில் தடுக்கக்கூடாது என உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டனர்.நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், சுந்தர்மோகன் அமர்வு: நிலத்தை வகை மாற்றம் செய்த உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. இந்நீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும்வரை நிலத்தில் எவ்வித மாற்றமும் செய்யக்கூடாது. தமிழக வருவாய்த்துறை செயலர், ராமநாதபுரம் கலெக்டர், மத்திய பொதுப்பணித்துறை சிறப்பு இயக்குனர் ஜெனரலுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு அக்.15க்கு ஒத்தி வைக்கப்படுகிறது.இவ்வாறு உத்தரவிட்டனர்.