திருமண உதவித்தொகை வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி
மதுரை : மூவலுார் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டத்தின் உதவித் தொகை கோரிய வழக்கில் தற்போது அத்திட்டம் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.தென்காசி மாவட்டம் லைலா பீர் முகம்மது தாக்கல் செய்த மனு:மூவலுார் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டத்தின் கீழ் உதவித் தொகை கோரி தென்காசி மாவட்ட சமூக நல அலுவலரிடம் விண்ணப்பித்தேன். அவர் நிராகரித்து 2024 ஆக.30ல் உத்தரவிட்டார். அதை ரத்து செய்து திருமண உதவித் தொகை வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி வி.லட்சுமிநாராயணன் விசாரித்தார்.அரசு தரப்பு: தற்போது மூவலுார் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டமானது உயர்கல்வி உறுதி திட்டம் (6 வது வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு மற்றும் உதவி பெறும் பள்ளியில் தமிழ்வழியில் பயின்று உயர்கல்வி கற்கும் கல்லுாரி மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டமாக) பெயர் மாற்றப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இவ்வாறு தெரிவித்தது.நீதிபதி: 'மனுதாரர் 2019ல் விண்ணப்பித்தார். அப்போது அத்திட்டம் நடைமுறையில் இருந்தது' என அவரது தரப்பு கூறியது. உத்தரவு பிறப்பிக்கும் தேதியில் நடைமுறையில் உள்ள சட்டத்தின் அடிப்படையில் விண்ணப்பத்தை பரிசீலிக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அத்திட்டம் 2024 ஆக.30 ல் அமலில் இல்லை என்பது சர்ச்சைக்குரியது அல்ல. திட்டம் அரசால் கைவிடப்பட்டதால் அதற்கான வழிகாட்டுதல் இருக்க முடியாது. மனுதாரர் கோரிய நிவாரணத்தை வழங்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.