உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தொகுப்பூதிய நர்ஸ்கள் ஊதிய நிர்ணயம் அரசுக்கு ஐகோர்ட் மூன்று மாதம் கெடு

தொகுப்பூதிய நர்ஸ்கள் ஊதிய நிர்ணயம் அரசுக்கு ஐகோர்ட் மூன்று மாதம் கெடு

சென்னை:அரசு மருத்துவமனைகளில், தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்ட நர்ஸ்களுக்கு, நிரந்தர நர்ஸ்களுக்கு இணையாக ஊதியம் வழங்குவது தொடர்பாக, 2018ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மூன்று மாதங்களில் அமல்படுத்தும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2015ல் தொகுப்பூதிய அடிப்படையில், 7,243 நர்ஸ்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். இரண்டு ஆண்டுகளுக்கு பின், பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்று, தெரிவிக்கப்பட்டது. ஆனால், 4,000 நர்ஸ்கள் மட்டுமே பணி நிரந்தரம் செய்யப்பட்டனர்.இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 'தொகுப்பூதிய நர்ஸ்கள், நிரந்தர நர்ஸ்களுக்கு இணையாக பணி செய்வதால், அவர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். 'சுகாதாரத் துறை செயலர் தலைமையில் குழு அமைத்து, நிரந்தர நர்ஸ்களின் பணியுடன், தொகுப்பூதிய நர்ஸ்கள் செய்யும் பணியை ஒப்பீடு செய்து, ஆறு மாதத்தில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவது தொடர்பாக முடிவெடுக்க வேண்டும்' என, 2018ல் உத்தரவிட்டது.இந்த உத்தரவை, தமிழக அரசு நிறைவேற்றவில்லை எனக்கூறி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தொகுப்பூதிய நர்ஸ்கள், நிரந்தர நர்ஸ்களின் பணி குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, ஒய்வு பெற்ற நீதிபதிகள் பார்த்திபன், பாரதிதாசன் அடங்கிய குழுவை அமைத்து உத்தரவிட்டது.இந்த வழக்கில், நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், பி.டி.ஆஷா அடங்கிய அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவு: ஓய்வுபெற்ற நீதிபதிகள் பார்த்திபன், பாரதிதாசன் குழு அளித்த அறிக்கை அடிப்படையில், தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்ட நர்ஸ்களுக்கு, நிரந்தர நர்ஸ்களுக்கு இணையாக ஊதியம் வழங்குவது தொடர்பாக, நீதிமன்றம் 2018ல் பிறப்பித்த உத்தரவை, தமிழக அரசு மூன்று மாதங்களில் அமல்படுத்த வேண்டும்.தற்போதைக்கு, இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்படுகிறது. இந்த உத்தரவை அமல்படுத்தாவிட்டால், இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுக்கலாம்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை