அ.தி.மு.க., நிர்வாகியை கைது செய்ய உயர் நீதிமன்றம் இடைக்கால தடை
சென்னை:சமூக வலைதளத்தில் பொய்யான தகவலை பரப்பியதாக பதிவு செய்த வழக்கில், அ.தி.மு.க., - ஐ.டி., பிரிவு இணை செயலர் நிர்மல்குமாரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நிர்மல்குமார் தாக்கல் செய்த மனு:'பெஞ்சல்' புயல் காரணமாக, சென்னையில் பலத்த மழை பெய்தது. அப்போது, மெரினா கடற்கரை பகுதியில், மின் கசிவு ஏற்பட்டதாக, சமூக வலைதளத்தில் நவ., 30ல் தகவல்கள் பதிவிட்டேன். மின் கசிவை அறியாமல், அப்பகுதிக்கு செல்லும் பொது மக்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில், அதுகுறித்த தகவல்களை, முதல்வரின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள முகவரிக்கும் பகிர்ந்தேன்.அதில் உண்மை இல்லை என்பதை அறிந்ததும், அந்த தகவல்களை உடனே நீக்கி விட்டேன். ஆனால், பொய்யான தகவல்களை பரப்பியதாக, என் மீது மூன்று பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக, ஆளும் அரசின் துாண்டுதல் காரணமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, முன் ஜாமின் வழங்க வேண்டும்இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு, நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை தரப்பில் வழக்கறிஞர் சந்தோஷ் ஆஜராகி, ''சமூக வலைதளத்தில், உண்மையில்லாத, உறுதிப்படுத்தப்படாத தகவல்களை, மனுதாரர் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இதுபோல உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பதிவு செய்ய மாட்டேன் என, நீதிமன்றத்தில் ஏற்கனவே உறுதி அளித்துள்ளார். இருப்பினும், தொடர்ந்து உண்மையில்லாத தகவல்களை பதிவிட்டு வருகிறார்,'' என்றார்.இதையடுத்து, 'எந்தவொரு பதிவையும் உறுதிப்படுத்தாமல் சமூக வலைதளத்தில் பதிவு செய்ய மாட்டேன்; பொய்யான தகவல்களை பதிவிட மாட்டேன்' என, பிரமாண மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை நாளை தள்ளிவைத்தார். அதுவரை, மனுதாரரை கைது செய்யவும் இடைக்கால தடை விதித்தார்.