வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அருமை
சென்னை: 'அரசியல் கட்சி பொதுக்கூட்டங்கள் தொடர்பாக, அனைத்து கட்சிகள் கூட்டத்தை கூட்டி, புதிய விதிகளை வகுப்பது நல்லது' என, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. பா.ம.க., தலைவர் அன்புமணி, 'உரிமை மீட்க, தலைமுறை காக்க' என்ற பெயரில், கடந்த ஜூலை 25ம் தேதி முதல் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். ஈரோட்டில் மூன்று இடங்களும், திருப்பூரில் குமரன் சாலை முதல் மாநகராட்சி அலுவலகம் வரையும் நடைபயணம் மேற்கொள்ள அனுமதி கோரி, திருப்பூர், ஈரோடு மாவட்ட காவல் துறையிடம், அவரது கட்சியினர் மனு அளித்துள்ளனர். இதை நிராகரித்து, மாவட்ட காவல் துறை உத்தரவிட்டது. இதை எதிர்த்து, திருப்பூர் மற்றும் ஈரோடு வடக்கு மாவட்ட பா.ம.க., செயலர்கள் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், ''புதிதாக அனுமதி கோரி அளித்த மனுக்களை பரிசீலித்து, அந்தந்த மாவட்ட காவல்துறை உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்,'' என, உத்தரவிட்டு, மனுக்களை முடித்து வைத்தார். மேலும், 'அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள் நடத்துவது தொடர்பாக, ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. 'இவ்விவகாரத்தில், அனைத்து கட்சிகளின் கூட்டத்தை கூட்டி, பாரபட்சம் இன்றி ஒரு விதிகளை வகுப்பது நல்லது' என, அரசுக்கு அறிவுறுத்தினார்.
அருமை