உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விதிமீறல் ஷேர் ஆட்டோக்களின் உரிமத்தை ரத்து செய்ய விதிகளில் திருத்தம்; உயர்நீதிமன்றம் உத்தரவு

விதிமீறல் ஷேர் ஆட்டோக்களின் உரிமத்தை ரத்து செய்ய விதிகளில் திருத்தம்; உயர்நீதிமன்றம் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை:போக்குவரத்து விதிகளை மீறி பாதசாரிகள், பிற வாகன ஓட்டிகளை பீதியடையச் செய்யும் வகையில் ஆபத்தான முறையில் ஷேர் ஆட்டோக்கள் ஓட்டுவதை ஒழுங்குபடுத்த,உரிமத்தை ரத்து செய்ய மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.செல்லப்பாண்டியன் என்பவர் குடிபோதையில் ஷேர் ஆட்டோவை 10க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வேகமாக, அலட்சியமாக மதுரை- கமுதி மெயின் ரோடு பசும்பொன் அருகே 2015ல் ஓட்டிச் சென்றார். போலீஸ் வேன் மீது மோதியதில் ஆட்டோ கவிழ்ந்தது. மூன்று பேர் சம்பவ இடத்தில் இறந்தனர். சிலர் காயமடைந்தனர். கமுதி போலீசார் வழக்கு பதிந்தனர். செல்லப்பாண்டியனுக்கு 2019ல் பரமக்குடி நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்து அவர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன்: குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துக்களை குறிப்பாக ஷேர் ஆட்டோ விஷயத்தில் இலகுவாக கையாள முடியாது. ஆட்டோ டிரைவர்கள் அவசரமாக ஓட்டுவதுடன் சாலையின் நடுவில் திடீரென நிறுத்துகின்றனர். 'ஜிக் ஜாக்' முறையில் ஓட்டுகின்றனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட அதிக பயணிகளை ஏற்றிச் செல்வதை தீவிரமானதாக பார்க்க வேண்டும். குடிபோதையில் வாகனம் ஓட்டும்போது எந்த அனுதாபமும் காண்பிக்கக்கூடாது.ஷேர் ஆட்டோக்களில் அதிக நபர்களை ஏற்றிச் செல்வதை தடுக்க சோதனையிடுமாறு சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு இந்நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டுள்ளது. ஷேர் ஆட்டோக்களுக்கு எதிரான விபத்து வழக்குகள், விதிகளை மீறி அதிக பயணிகள், சரக்குகளை ஏற்றியதாக 2008-2024 வரை பதிவான வழக்குகளின் விபரங்களை அரசு தரப்பு தாக்கல் செய்தது. அதன்படி 354 விபத்து மரண வழக்குகள், விபத்தினால் ஏற்பட்ட காயம் தொடர்பாக 2290 வழக்குகள், அதிக பயணிகளுடன் இயக்கியதற்காக 50 ஆயிரத்து 312, அதிக சரக்குகளை ஏற்றியதற்காக 2821, போக்குவரத்து விதிமீறல்களுக்காக 4 லட்சத்து 77 ஆயிரத்து 600 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இவ்விபரங்கள் கவலையளிக்கும் வகையில் உள்ளன. ஆனால், இந்த அபாயகரமான விதிமீறல் விளைவாக ஏற்படும் மனித உயிரிழப்புகளை அரசு கவனத்தில் கொள்ளவில்லை. சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் ஷேர் ஆட்டோ டிரைவர்களின் சட்டவிரோதச் செயலை தடுக்க வேண்டும். போக்குவரத்து விதிகளை மீறி பாதசாரிகள், பிற வாகன ஓட்டிகளை பீதியடையச் செய்யும் வகையில் ஆபத்தான முறையில் ஷேர் ஆட்டோக்களை ஓட்டுவதை ஒழுங்குபடுத்த, தமிழக போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலருக்கு இந்நீதிமன்றம் கீழ்க்கண்ட வழிகாட்டுதல்களை பிறப்பிக்கிறது.ஷேர் ஆட்டோவின் உரிமத்தை ரத்து செய்ய மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும். அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட அதிக நபர்களுடன் ஆபத்தான முறையில் ஓட்டினால், ஷேர் ஆட்டோவை பறிமுதல் மற்றும் முடக்கம் செய்வதற்கு விதியை உருவாக்க வேண்டும்.இவ்வழக்கு மனுதாரர் விதிகளுக்கு புறம்பாக நடந்து கொண்டதை வெளிப்படுத்தும் பொதுவான வழக்கு. அவர் மக்களின் பாதுகாப்பை முற்றிலும் புறக்கணித்து செயல்பட்டுள்ளார். அவர் எந்த தண்டனை குறைப்பிற்கும் தகுதியற்றவர். கீழமை நீதிமன்ற உத்தரவை உறுதி செய்து, மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ram
மே 24, 2025 11:14

சென்னையில் புத்தியீசல்போல ஆட்டோக்கள் பெருகி விட்டது.


theruvasagan
மே 24, 2025 10:59

இப்போது ஓடும் ஆட்டோ ஷேர் ஆட்டோக்களில் 90 சதவிகிதம் முறையான லைசன்ஸ் பர்மிட் இல்லாமல் இயங்கும் வாகனங்களே என்பது தெரியாது போல. இந்த விதிமீறல்கள் எல்லாம் வாகன போக்குவரத்துத் துறை அதிகாரிகளின் ஆசியோடும் அரவணைப்போடும்தான்..


RAVINDRAN.G
மே 24, 2025 10:16

ஒவ்வொரு நேரத்துக்கு ஏற்றமாதிரி ஷேர் ஆட்டோ ரேட் இருக்கும். தாம்பரம் டு நடுவீரப்பட்டு 12 கிலோமீட்டர் எங்க ஏறி எங்க இறங்கினாலும் ருபாய் 25 கொடுக்கவேண்டும். பன்னிரண்டு பேர் உட்கார்ந்தால் மட்டுமே ஆட்டோ எடுப்பாங்க. சாய் ராம் கல்லூரிக்கு போகணும்னா ஆளுக்கு ருபாய் 50 கொடுக்கணும். இரவு 9 மணிக்கு மேல் ருபாய் 50 ஒரு ஆளுக்கு தரணும். சாய் ராம் கல்லூரிக்கு ருபாய் 100 தரணும். போலீஸ் மாமூல் மாதம் ஒருமுறை சரியா போய்டும்.


Kasimani Baskaran
மே 24, 2025 09:31

குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் பேருந்தில் ஆட்டு மந்தை போல பொதுமக்களை அடைத்து பயணம் செய்ய வைப்பது மட்டும் ஓகேவா?


Padmasridharan
மே 24, 2025 08:03

எல்லா வண்டி ஓட்டிகளும் இப்படித்தான்.. ZigZag நடப்பவர்களுக்கோ சைக்கிள் மிதிப்பவர்களுக்கோ மதிப்பில்லாமல் Roads & Signals இந்த நாட்டிலே வண்டிகளுக்கு இருக்கும். மரியாதை உயிர்களுக்கு இல்லாமல் போய்விட்டது. ஹார்ன் அடிச்சே ரோட்டில மக்களை பயமுறுத்துறாங்க. . அது சரி குடிகாரன் வண்டியில ஏன் இத்தன பேரு ஏறினாங்க. சாமி


K.Uthirapathi
மே 24, 2025 06:41

அரசு மற்றும், தனியார் பேருந்துகளில் அனுமதித்த எண்ணிக்கையை விட கூடுதலான பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளை ஏன் அரசு அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை