போராட்ட அனுமதிக்கான சட்ட விதி திருத்தம் செய்ய ஐகோர்ட் உத்தரவு
சென்னை:போராட்டங்களுக்கு அனுமதி கோரி விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கும் வகையில், சென்னை நகர போலீஸ் சட்ட விதியில் திருத்தம் கொண்டு வரும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பட்டியலினத்தவர்களுக்கான மூன்று சதவீத உள் ஒதுக்கீட்டை திரும்ப பெற்றது உள்பட, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, கடந்தாண்டு நவ., 7ல் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து சென்று, கவர்னரை சந்தித்து மனு அளிப்பது என, புதிய தமிழகம் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. நவ., 6ல் பேரணிக்கு அனுமதி மறுத்து, காவல் துறை உத்தரவு பிறப்பித்தது. 'இந்த உத்தரவை பிறப்பித்த அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசாரின் செயலால் கட்சிக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு, ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், புதிய தமிழகம் கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டது.வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன் பிறப்பித்த உத்தரவு:போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி கோரி விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை, ஐந்து நாட்களில் இருந்து பத்து நாட்களாக அதிகரிக்கும் வகையில், சென்னை நகர போலீஸ் சட்ட விதியில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.விண்ணப்பங்களை பெற்ற, 48 மணி நேரத்துக்குள், சென்னை போலீஸ் ஆணையர், அவற்றின் மீது முடிவெடுக்க வேண்டும். பத்து நாட்களுக்கு முன் விண்ணப்பம் அளித்த புதிய தமிழக கட்சியின் விண்ணப்பத்தை நிராகரித்து, கடைசி நேரத்தில் உத்தரவிட்டதால், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக, அக்கட்சியினருக்கு எதிராக பதியப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுகிறது.கடைசி நேரத்தில் அனுமதி மறுத்ததால், ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கோரிய மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.