உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தோரணவாயிலை அகற்றும்போது பலியானவர் குடும்பத்திற்கு இழப்பீடு உயர்நீதிமன்றம் உத்தரவு

தோரணவாயிலை அகற்றும்போது பலியானவர் குடும்பத்திற்கு இழப்பீடு உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: மதுரை மாட்டுத்தாவணியில் நக்கீரர் தோரண வாயிலை அகற்றும்போது பலியானவரின் குடும்பத்திற்கு ரூ.17 லட்சம் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே திருமாலை சேர்ந்த கதிர்வேல் தாக்கல் செய்த மனு:எனது மகன் நாகலிங்கம் 20. மணல் அள்ளும் இயந்திர ஆப்பரேட்டராக வேலை செய்தார். மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர்.,பஸ்டாண்ட் அருகே நக்கீரர் தோரண வாயில் இருந்தது. இது போக்குவரத்திற்கு இடையூறாக இருந்ததால் அகற்ற 2024ல் உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது. இதனடிப்படையில் பிப்.12 இரவு 11:30 மணிக்கு தோரண வாயிலை அகற்றும் பணி அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்டது. அப்பணியில் நாகலிங்கம், மற்றொரு இயந்திர ஆப்பரேட்டரும் ஈடுபடுத்தப்பட்டனர். தோரணவாயில் இடிந்து நாகலிங்கம் மீது விழுந்ததில் இறந்தார். புதுார் போலீசார் வழக்கு பதிந்தனர்.விபத்திற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனக்குறைவே காரணம். முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. எங்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடுகோரி கலெக்டர், மாநகராட்சி கமிஷனருக்கு மனு அனுப்பினேன். இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி எஸ்.ஸ்ரீமதி பிறப்பித்த உத்தரவு: மாநகராட்சி கமிஷனர், தோரண வாயிலை அகற்ற ஒப்பந்தப் பணி மேற்கொண்டவர் தலா ரூ.7 லட்சம், கலெக்டர் ரூ.3 லட்சம், மொத்தம் ரூ.17 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இதை நிறைவேற்றியது குறித்து அரசு தரப்பில் ஆக.29 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ