உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோயில் நிதியில் திருமண மண்டபம் அமைக்கும் அரசாணை ரத்து; உயர்நீதிமன்றம் உத்தரவு

கோயில் நிதியில் திருமண மண்டபம் அமைக்கும் அரசாணை ரத்து; உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: கோயில் நிதி மூலம் திருமண மண்டபங்கள் அமைக்கும் அரசாணைகளை ரத்து செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. மதுரை மாவட்டம் எழுமலை ராம ரவிக்குமார் தாக்கல் செய்த பொதுநல மனு: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான வாகீஸ்வரர் கோயில், திண்டுக்கல் காளகத்தீஸ்வரர் அபிராமி அம்மன் கோயில் உள்ளிட்ட 5 கோயில்களுக்கு சொந்தமான இடங்களில் ரூ.22 கோடியே 20 லட்சத்தில் திருமண மண்டபங்கள் அமைக்க தமிழக அறநிலையத்துறை 2023 மார்ச் 3 ல் அரசாணை வெளியிட்டது. இப்பணியை அந்தந்த கோயில் நிதி மூலம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் காளகத்தீஸ்வரர் அபிராமி அம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் திருமண மண்டபம் அமைக்கப்படுகிறது. இதற்கு மாநகராட்சியிடம் கட்டட அனுமதி பெறவில்லை. ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தையத்தில் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உபகோயில். வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் ரூ.6 கோடியே 30 லட்சத்தில் திருமண மண்டபம் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கி அறநிலையத்துறை மே 16 ல் அரசாணை வெளியிட்டது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உபரி நிதியிலிருந்து தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பிச்சம்பட்டி கம்பராயப்பெருமாள் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் ரூ.3 கோடியே 75 லட்சத்தில் திருமண மண்டம் அமைக்கப்படும். உத்தமபாளையம் திருக்காளத்தீஸ்வரர் மற்றும் நரசிங்கப்பெருமாள் கோயில் நிலத்தில் ரூ.4 கோடியே 54 லட்சத்தில் திருமண மண்டபம் அமைக்க 2024 டிசம்பரில் அறநிலையத்துறை முதன்மை செயலர் அரசாணை வெளியிட்டார். இவை அறநிலையத்துறை சட்டத்திற்கு புறம்பானது. கோயில் நிதியை ஹிந்து மத கொள்கைகளை பரப்புதல், அர்ச்சகர், ஓதுவார் பள்ளிகளை நிறுவுதல், ஹிந்து மதம், தத்துவம் அல்லது சாஸ்திரங்கள் ஆய்வு அல்லது கோயில் கட்டடக்கலை பயிற்றுவிக்கும் பல்கலை அல்லது கல்லுாரி நிறுவுதல், ஹிந்து குழந்தைகளுக்கான அனாதை இல்லங்களை நிறுவுதல், பக்தர்களின் நலனிற்காக மருத்துவமனைகள், மருந்தகங்களை அமைக்க பயன்படுத்த வேண்டும். திருமண மண்டபம் அமைக்கும் அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள் முருகன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில் அருண்சுவாமிநாதன் ஆஜரானார். அரசு தரப்பு வழக்கறிஞர்: ஹிந்து மத நம்பிக்கை உள்ளவர்கள் கோயில்களில் திருமணம் செய்து கொள்கின்றனர். அவர்களுக்கு உதவும் நோக்கில் திருமண மண்டபங்கள் அமைக்கப்படுகின்றன. அதற்கு மிகக்குறைந்த தொகை வாடகையாக வசூலிக்கப்படுகிறது. அத்தொகை கோயில் பராமரிப்பிற்கு பயன்படுத்தப்படுகிறது. இதில் வணிகநோக்கம், விதிமீறல் இல்லை. இவ்வாறு தெரிவித்தார். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கோயில் நிதி என்பது அரசின் பொது நிதி அல்ல. பக்தர்கள், நன்கொடையாளர்கள் நிதி வழங்குகின்றனர். அதை அன்னதானம், பிரசாதம் வழங்குதல், கோயில் மேம்பாடு உள்ளிட்ட மத நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். திருமணம் என்பது வாழ்க்கை ஒப்பந்தம். இதில் அனைத்து மதங்களும் வெவ்வேறு நடைமுறைகளை பின்பற்றுகின்றன. மதச்சார்பற்ற அரசு கோயில் நிதியிலிருந்து வணிக நோக்கில் திருமண மண்டபம், வணிக கட்டடங்கள் அமைக்கும் என எதிர்பார்க்கவில்லை. வாடகைக்கு விடும் வகையில் கோயில் நிதியில் திருமணம் மண்டபங்கள் அமைப்பது அறநிலையத்துறை சட்டத்திற்கு எதிரானது. மதச்சார்பற்ற அரசு பாகுபாட்டுடன் நடந்து கொள்ளக்கூடாது. மன்னர்களின் ஆட்சியில் பல கோயில்கள் அமைக்கப்பட்டன. அவை மதிப்பு மிக்கவை. நம் கலாசாரம், கட்டடக்கலையின் அடையாளமாக திகழ்கின்றன. அவற்றிற்கு சொந்தமான சொத்துக்கள் உள்ளன. கோயில்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. கோயில்களை மேற்பார்வையிட்டு முறைப்படுத்த மட்டுமே அரசுக்கு அதிகாரம் உள்ளது. மத நடைமுறைகள், பழக்கவழக்கங்களில் தலையிட அரசுக்கு அதிகாரம் இல்லை. கோயில் நிதியை எவ்வாறு பயன்படுத்துவது என அந்தந்த கோயில் நிர்வாகங்கள்தான் முடிவெடுக்க இயலும். சட்டசபையில் அரசு அறிவிப்பு வெளியிட்டதன் அடிப்படையில் கோயில் நிதியில் திருமண மண்டபங்கள் அமைக்க அறநிலையத்துறை அரசாணைகள் வெளியிட்டது ஏற்புடையதல்ல. அவை ரத்து செய்யப்படுகின்றன. இவ்வாறு உத்தரவிட்டனர். கோயில் நிதியில் வணிக வளாகம், கல்வி நிறுவனம், திருமண மண்டபங்கள் அமைக்கும் அரசாணைக்கு எதிராக நிலுவையிலுள்ள பிற வழக்குகளில், மனுதாரர்கள் தரப்பிற்கு அரசாணையின் நகல் வழங்க அரசு தரப்பிற்கு அறிவுறுத்தி விசாரணையை ஆக.25 க்கு ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

ஆரூர் ரங்
ஆக 20, 2025 12:21

மாநகராட்சி கட்டிய சமூகக் (திருமண) கூடங்கள் கழக ஆட்களின் கட்டுப்பாட்டில்?. . அவர்களுக்கு மேலதிகமாக கொடுத்தால் மட்டுமே இடம் கிடைக்கும் நிலை. அதே போல இந்த ஆலய நிதியில் திருமண மண்டபம் கட்டுவதால் கட்டுமான ஒப்பந்தங்கள் பிறகு வாடகைக்கு விடுதல் இரண்டிலும் ஆளும் ஆட்களுக்கு வரும்படி வாய்ப்பு. நாத்திக அரசு ஆஸ்திக ஆலயங்களிலிருந்து விரட்டப்பட வேண்டும்


Venkateswaran Rajaram
ஆக 20, 2025 10:45

இந்த அரசியல் வியாபாரிகள் திட்டமே, திட்டம் போட்டு, அத்திட்டத்தில் ஊழல் செய்து தரமில்லாத கட்டிடங்களை கட்டி கணக்கு காண்பித்து கொள்ளை அடிப்பதுதான் ,


vbs manian
ஆக 20, 2025 09:06

ஏழை அர்ச்சகர்கள் வறுமையில் வாடுகின்றனர். கோடி ரூபாய் செலவழித்து கும்பாபிஷேகம். வணிக நோக்கில் திருமண மண்டபம். பாவம் தான் வந்து சேரும். அந்த இறைவனும் ஏற்க மாட்டான்.


V RAMASWAMY
ஆக 20, 2025 08:51

இறை சக்தியென்பது மனித சக்திக்கு அப்பாற்பட்ட நம்மை இயக்கும் மாபெரும் புனித சக்தி. அந்த சக்திக்கு கோளாறுகளோ விதிகளை மீறிய செயல்களோ உற்சவங்களிலோ அலங்காரங்களிலோ பாரம்பரிய நிகழ்வுகளிலோ தன்னிச்சைப்படி யாராவது மாற்றங்கள் செய்ய முற்பட்டால் அது தெய்வம் நின்று கொல்லும் என்ற கூற்றுப்படி விபரீத விளைவுகளை ஏற்படுத்தும். நாகை சுனாமி தாக்கத்தை எவரும் மறந்திருக்கமுடியாது. இம்மாதிரி தீவிர விபரீத விளைவுகள் மீண்டும் நிகழ்ந்தால் எவராலும் தாங்கமுடியாது. அறமில்லா அற நிலையைத்துறையும் அரசும் அதிகாரிகளும் இவற்றை நினைவு கொள்ளவேண்டும்.


Padmasridharan
ஆக 20, 2025 07:25

கோவில்கள்ல நடந்த எத்தனை திருமணங்கள் விவகாரத்தில் முடிவடைந்துள்ளது என்பதையும் கணக்கில் எடுக்க வேண்டும். ஒன்றாக இருப்பதற்குத்தான் திருமண நட்பு. பிரிந்து வாழ்வதற்கு கோவில்களில் செய்ய வேண்டாமே.


GMM
ஆக 20, 2025 07:24

அனைத்து மதத்தின் பிரதிநிதிகள் அமைச்சர், முதல்வர் ஆகும் வகையில் சட்டம் இருக்கும் போது, இந்துவில் இருந்தாலும் இந்து மத எதிர்ப்பு நாத்திக திராவிட கொள்கையில் பிறந்த திமுக போன்ற கட்சிகள் தேர்வாகும் போது, இந்து அறநிலைய துறை அரசின் நிர்வாகத்தில் இருப்பது என்றும் சரிவராது. அறநிலைய துறை கலைக்க முடியும். திருமண மண்டபம், சினிமா ஹால் கட்டி, தைரியமாக விளக்கம் சொல்வர். அரசாணை ரத்து சரியே. ஆனால், உச்ச நீதிமன்றம் சென்று வேண்டிய உத்தரவு பெறும் வாய்ப்பு தடுக்க முடியாது.?


V RAMASWAMY
ஆக 20, 2025 07:19

அற நிலையத்துறையை மூடி கோயில்கள் நிர்வாகம் அந்தந்த கோயில் ட்ரஸ்ட்டிக்களிடமே இருக்கவேண்டும் என்று நீதி மன்றம் உத்தரவு போட்டாலும் வரவேற்கத்தக்கதே. எப்படியிருப்பினும் தங்கள் கட்சி கொள்கைகளை மறைமுகமாகத்திணிக்கும் இந்து மத விரோத அரசின் முயற்சிகளை இம்மாதிரி நீதிமன்றம் கண்காணித்துக் கொண்டே இருக்கவேண்டும், முறியடித்துக்கொண்டே இருக்க வேண்டும்.


Vasu
ஆக 20, 2025 07:17

Excellent judgement


raja
ஆக 20, 2025 06:50

திருட்டு திராவிட ஓங்கோல் கோவால் புர பிறவி கொள்ளையனுக்கு தமிழக கோயில்களை கொள்ளை அடிக்க வேண்டும் என்பதே குறிக்கோள்...


naranam
ஆக 20, 2025 05:03

தீயமுக முதல்வருக்கு மற்றுமொரு மரண அடி...கோவில் பணத்தைக் கொள்ளையடிக்கும் இந்த தீயமுக ஆட்சி அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் படு தோல்வி அடைந்தது விடும்..


சமீபத்திய செய்தி