புராதன சின்ன ஆணையம் அமைக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் கெடு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: 'புராதன சின்னங்கள் மற்றும் கோவில்களின் கட்டடங்களை பாதுகாக்க கொண்டு வரப்பட்ட சட்டத்தின் அடிப்படையில், புராதன சின்ன ஆணையத்தை நான்கு வாரத்திற்குள் அமைக்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கிழக்கு ராஜகோபுரத்துக்கு எதிரே, 6.40 கோடி ரூபாய் செலவில் அடுக்குமாடி வணிக வளாகம் கட்ட திட்டமிட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக, 2023 செப்., 14ல், அறநிலையத்துறை சார்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், 'இண்டிக் கலெக்டிவ்' அறக்கட்டளை நிர்வாகி டி.ஆர்.ரமேஷ் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வு, 'தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கோவிலின் நான்காவது பிரகாரத்தில், சுற்றுச்சுவருக்கு மிக அருகே பக்தர்கள் காத்திருப்பு கூடம் கட்ட வேண்டிய அவசியம் என்ன என்று, ஹிந்து அறநிலையத்துறை விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். கோவில் உள்ளே, வெளியே எவ்வித கட்டுமானங்களையும் மேற்கொள்ளக்கூடாது' எனவும் உத்தரவிட்டது. கடந்த 5ம் தேதி, கோவிலில் கட்டுமானங்கள் மேற்கொள்வது குறித்து, சிறப்பு அமர்வில் உள்ள நீதிபதிகள் நேரில் ஆய்வு செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கு, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, திருவண்ணாமலை கோவில் இணை ஆணையர் சார்பில், சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி, திருவண்ணாமலை கோவிலில் கட்டப்படவுள்ள கட்டுமானங்கள் குறித்த விபரங்கள் அடங்கிய விரிவான அறிக்கையை தாக்கல் செய்தார். அப்போது மனுதாரரான டி.ஆர்.ரமேஷ் ஆஜராகி, ''திருவண்ணாமலை கோவிலில் நடக்கும் எந்தக் கட்டுமானங்களுக்கும் நகராட்சி அனுமதி பெறவில்லை. இங்கு, 40 கோடி ரூபாய் செலவில் நடக்கும் எல்லா கட்டுமானங்களும் சட்ட விரோதம். மேலும், தமிழக புராதன ஆணைய சட்டம் 2012, கடந்த ஆண்டு மார்ச் 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி, புராதன கோவில்களில் மேற்கொள்ளப்படும் கட்டுமானங்களுக்கு, நகராட்சியானது ஆணையத்தின் ஒப்புதல் பெற்று தான் அனுமதி வழங்க முடியும்,'' என்றார். அப்போது குறுக்கிட்ட சிறப்பு பிளீடர், ''மாநில - மத்திய அரசுகளால் அறிவிக்கப்பட்ட புராதன சின்னங்களுக்கு மட்டும் தான், இந்த சட்டம் பொருந்தும்,'' என்றார். அதை ஏற்க மறுத்து, அறிக்கையை பார்வையிட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கோவிலுக்குள் அன்னதான கூடம், பக்தர்கள் காத்திருப்பு கூடம், பிரசாத கடைகள், யானை நினைவு மண்டபம் போன்ற கட்டுமானங்களை கட்டக்கூடாது. கோவிலின் வெளிப்பகுதியில், சின்ன கடைத்தெருவில் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், ஏழு தீர்த்த குளங்கள் புனரமைப்பு, பக்தர்கள் தங்குமிடம், ராஜ கோபுரத்துக்கு மின் விளக்குகள் பொருத்தும் பணி உள்ளிட்ட சில கட்டுமான பணிகளை அறநிலையத்துறை மேற்கொள்ளலாம். அம்மன் திருத்தேர் பழுது நீக்கும் பணியையும் செய்யலாம். புராதன சின்ன ஆணைய சட்டம் கடந்தாண்டு அமலுக்கு வந்த நிலையில், ஒன்றரை ஆண்டுகள் கடந்தும் புராதன சின்ன ஆணையம் அமைக்கப்படாதது ஏன்? மாநில அரசு இந்த ஆணையத்தை நான்கு வாரங்களுக்குள் அமைக்க வேண்டும். கோவிலுக்கு உள்ளே, வெளியே மேற்கொள்ள உள்ள கட்டுமானங்களின் அவசியம் குறித்த அறிக்கையையும், தொழில்நுட்ப அறிக்கையையும், கட்டுமானங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி, பெறப்பட்ட அனுமதிகள் குறித்த அறிக்கையையும், அறநிலையத்துறை தாக்கல் செய்ய வேண்டும். நீதிமன்றம் அனுமதி அளித்த கட்டுமான பணிகளை தவிர, வேறு எந்த பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது. வழக்கு விசாரணை, வரும் 23ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.