கிரிக்கெட் போட்டியில் மாணவர் மரணம்; 2 பேர் மீதான வழக்கு ஐகோர்ட்டில் ரத்து
சென்னை: கிரிக்கெட் விளையாட்டின் போது, 'கார்க்' பந்து பட்டு வாலிபர் மரணமடைந்த சம்பவத்தில், இருவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.திருவள்ளூர் மாவட்டம் புன்னபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன்; இவரது மகன் லோகநாதன், சட்டக்கல்லுாரி மாணவர். ஒத்திக்காடு ஏரியில், புன்னபாக்கம் கிரிக்கெட் கிளப்புக்கும், புதுவள்ளுர் கிரிக்கெட் கிளப்புக்கும் இடையே நடந்த கிரிக்கெட் போட்டியில் லோகநாதன் பங்கேற்றார். மைதானத்தில் இல்லை
போட்டியில், கார்க் பந்து பயன்படுத்தப்பட்டது. பேட்ஸ்மேன் அடித்ததில், லோகநாதன் மார்பில் கார்க் பந்து பட்டதில் மரணம் அடைந்தார்; 2020 டிசம்பரில் சம்பவம் நடந்தது.போட்டியை ஏற்பாடு செய்தவர்களுக்கு எதிராக, புல்லம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, ராசு மற்றும் அய்யப்பன் என்பவர்கள், உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். இம்மனுக்கள், நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தன.மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி.சரவணபவன், ''சம்பவம் நடந்த போது, மைதானத்தில் ராசு இல்லை. கான்ஸ்டபிள் பணிக்கான தேர்வை அவர் எழுதிக் கொண்டிருந்தார். போட்டி ஏற்பாட்டாளரான அய்யப்பனுக்கும், சம்பவத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை,'' என்றார்.மனுக்களை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு:
சம்பவம் தொடர்பான முதல் தகவல் அறிக்கையை முழுமையாக பார்த்தால், கார்க் பந்தை பயன்படுத்தி நடந்த கிரிக்கெட் போட்டியை ஏற்பாடு செய்ததாக, இருவர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.கார்க் பந்தை வைத்து, இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடுவது, நம் நாட்டில் சாதாரணமாக நடக்கிறது. கார்க் பந்தை வைத்து கிரிக்கெட் விளையாடுவதற்கு தடை ஏதும் இல்லை. உள்நோக்கம் கிடையாதுவிளையாட்டின் போது, பேட்ஸ்மேன் அடித்த பந்து, மைதானத்தில் இருந்த லோகநாதன் மீது பட்டுள்ளது. மார்பு பகுதியை பந்து தாக்கியதில், அவர் மரணம் அடைந்துள்ளார். போட்டியில் லோகநாதன் தானாக பங்கேற்றுள்ளார்.அவருக்கு காயம் ஏற்படுத்த வேண்டும் என்றோ, மரணத்தை விளைவிக்க வேண்டும் என்றோ, பேட்ஸ்மேனுக்கும், போட்டி ஏற்பட்டாளர்களுக்கும் எந்த உள்நோக்கமும் இல்லை.புகார் கொடுத்த லோகநாதனின் தந்தை, நீதிமன்றத்தில் இருந்தார். பாதிக்கப்பட்ட தனக்கு இழப்பீடு வழங்கும்படி அவர் கோரினார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரிடம், இரண்டு மாதங்களில் அவர் மனு அளிக்க வேண்டும். கலெக்டருக்கு தன் பரிந்துரையை செயலர் அளிக்க வேண்டும். அதன்பின், தகுந்த உத்தரவை திருவள்ளூர் கலெக்டர் பிறப்பிக்க வேண்டும். இருவருக்கும் எதிரான வழக்கு ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.