மனுதாரர் புகாரை ஏற்க உயர் நீதிமன்றம் மறுப்பு
சென்னை:புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில், குடிநீரில் அசுத்தம் கலந்த விவகாரம் குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, மார்க்ஸ் ரவீந்திரன் உள்ளிட்டோர் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி முகமது சபீக் அடங்கிய அமர்வு முன், மீண்டும் விசாரணைக்கு வந்தன.அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, ''வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. இச்சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவை, விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது,'' என்றார்.இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவின்படி, மனுதாரர் தரப்பில் அரசின் அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'சி.பி.சி.ஐ.டி., விசாரணையில் குறைபாடு உள்ளது. குடிநீரில் அசுத்தம் இருப்பதைக் கண்டறிந்த மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது' என்று கூறப்பட்டுள்ளது.அப்போது, 'சொந்த சமுதாய மக்கள் குடிக்கும் குடிநீரில், எப்படி அசுத்தம் செய்வர்? உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாலும் கூட, வழக்கு விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்றலாம்' என, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.இதையடுத்து, 'போலீசார் விசாரணை முறையாக நடத்தப்படவில்லை என, எந்த ஆதாரமும் சமர்ப்பிக்கப்படவில்லை. அவ்வாறு இருக்கும்போது, போலீஸ் விசாரணையை ஏன் சந்தேகிக்க வேண்டும்' என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மனுதாரர் தரப்பு குற்றச்சாட்டுகள் குறித்து பதிலளிக்க அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 12ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.