உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வனவிலங்கு குற்றங்கள் விபரம் அறிக்கை கேட்கிறது ஐகோர்ட்

வனவிலங்கு குற்றங்கள் விபரம் அறிக்கை கேட்கிறது ஐகோர்ட்

சென்னை,:'மாவட்ட வாரியாக, வன விலங்கு குற்றங்கள் குறித்த விபரங்கள் அடங்கிய விரிவான அறிக்கையை, வனத்துறை தாக்கல் செய்ய வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.'வன குற்றங்கள் தொடர்பான விசாரணையில், வனத்துறைக்கு உதவுவதற்காக, வழக்கறிஞர்களை உள்ளடக்கிய மாவட்ட குழுக்களை அமைக்க உத்தரவிட வேண்டும்' என, மதுரையை சேர்ந்த மனோஜ் இம்மானுவேல் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வனத்துறை சார்பில் சிறப்பு பிளீடர் சீனிவாசன் ஆஜராகி, வனவிலங்கு குற்றங்கள் தொடர்பான விபரங்களை அறிக்கையாக தாக்கல் செய்தார்.இதை படித்த பின் நீதிபதிகள், 'நீதிமன்றம் கோரிய முழு விபரங்களை, வனத்துறை தாக்கல் செய்யவில்லை. அவ்வப்போது, அரிய வகை விலங்குகள், செம்மரம் உள்பட பட்டியலிடப்பட்ட மரங்களை கடத்துவதாக, ஊடகங்கள் மற்றும் நாளிதழ்களில் செய்திகள் வெளியாகின்றன. சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் நடக்கும் மரங்கள் கடத்தல் பற்றிய எவ்வித தகவலும் அறிக்கையில் இல்லை' என்று, தெரிவித்தனர்.பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:இந்த அறிக்கையில், ஜனவரி 2022 முதல் செப்டம்பர் 2024 வரையிலான, வன விலங்கு குற்றங்கள், சந்தன மர வழக்குகள், பட்டியலிடப்பட்ட மரங்கள் பற்றிய வழக்குகள் மற்றும் பிற குற்ற வழக்குகள் விபரங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன.சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் கோட்டங்களில், பட்டியலிடப்பட்ட மரங்கள் கடத்தல் குறித்த வழக்குகளின் விபரங்கள் இல்லை. மாறாக, விசாரணையில் உள்ள வழக்குகளின் விபரங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. இவற்றை பார்க்கும் போது, முழு விபரங்கள் வழங்கப்படவில்லை என்பது தெரிகிறது.எனவே, அனைத்து மாவட்டங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை, விசாரணை கட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை, தற்போது விசாரணை நிலுவையில் உள்ளதா என்பதையும், நீதிமன்றம் அறிய விரும்புகிறது.எனவே, வன விலங்கு குற்றங்கள், பட்டியலிடப்பட்ட மரங்கள் கடத்தல் மற்றும் பிற குற்றங்கள் குறித்து, பல்வேறு கட்டங்களில் விசாரணை மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றி, மாவட்ட வாரியாக விரிவான அறிக்கையை, வனத்துறை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ