உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கவுரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம் குறித்து ஆலோசித்து நடவடிக்கை: உயர் கல்வித்துறை அமைச்சர் தகவல்

கவுரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம் குறித்து ஆலோசித்து நடவடிக்கை: உயர் கல்வித்துறை அமைச்சர் தகவல்

ஊட்டி: 'பல ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் கவுரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம் குறித்து முதல்வருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்,' என, உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார். நீலகிரி மாவட்டம், ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் சார்பில், அறிவியல் அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், மாநில அளவிலான அறிவியல் அறிஞர் விருது, 'வேளாண் அறிவியல், உயிரியல் அறிவியல், வேதியியல் அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் அறிவியல், மருத்துவ அறிவியல், கணித அறிவியல், இயற்பியல் அறிவியல், சமூக அறிவியல் மற்றும் கால்நடை அறிவியல்,' ஆகிய, 10 துறைகளில் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை செய்ததற்காக, 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசுடன் வழங்கப்படுகிறது. மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன், 20 பேருக்கு விருதுகளை வழங்கி பேசுகையில்,''மாநில அரசு உயர் கல்வித்துறைக்கு கூடுதல் கவனம் செலுத்தி பல்வேறு செயல் திட்டங்களை வகுத்து வருகிறது. அதில், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றம் என்பது, மாநிலத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சிக்காக பாடுபடும்அரசின் ஒரு தன்னாட்சி பெற்ற உச்ச அமைப்பாகும். இந்த அமைப்பு, சமூகத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு உதவும் பல அறிவியல் தொழில்நுட்பத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில், நம் மாநில விஞ்ஞானிகளின் பங்களிப்புகளை அங்கீகரித்து கவுரவித்து வருகிறது,'' என்றார். தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறுகையில்,''மாநில முதல்வர் உயர்கல்வி துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இங்கு பல ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் கவுரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம் குறித்து முதல்வருடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் சாமிநாதன், அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் , தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் உறுப்பினர் செயலர் வின்சென்ட் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ