மனிதாபிமானம் செத்துவிட்டது ஹிந்து முன்னணி கவலை
திருப்பூர்:தமிழகத்தில் தினசரி படுகொலைகள் நடந்து வருவது கவலை அளிக்கிறது. மனிதாபிமானம் கேள்விக்குறியாகி வருவதாக ஹிந்து முன்னணி கவலை தெரிவித்துள்ளது.அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:தமிழகத்தில் படுகொலைகள், கூலிப்படையின் கொடூரம், கொலையாளிகள் சரண்டர் என நாளுக்கு நாள் அதிகமாக நடக்கிறது. இத்தகைய கொலைகளுக்கு காரணம் தனிப்பட்ட விரோதம் என்ற காரணத்தை தமிழக அரசு சொல்லி சமாதானம் தேடுகிறது. கொடூர குற்றவாளிகளை தண்டிப்பதில் காட்டும் அலட்சியம், குற்ற செயல் செய்வதற்கு தைரியத்தை கொடுக்கிறது என்ற உளவியல் தகவல் உண்மையாகிறது. பள்ளி முதல் ரயில், விமானம் வரையிலான குண்டு மிரட்டல் தொடர்கிறது. இதுவரை, அத்தகையோர் மீதான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கூலிப்படை அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சீரியல் கொலைகள் அதிகரித்துள்ளன. அரசியல்வாதிகள், அதிகாரிகள் என, தொடர் கொலைகள் கடந்த மூன்று ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையில் நடந்துள்ளது. மருத்துவர், ஆசிரியர், வக்கீல்கள் மீது என, ஒவ்வொரு நாளும் நடக்கின்ற கொடூர குற்றங்களை பார்க்கும்போது தமிழகத்தில் மனிதாபிமானம் செத்துவிட்டதோ என அஞ்சத் தோன்றுகிறது.கொடூர குற்றவாளிகளை பிடிக்கவும், குற்றங்களை தடுக்கவும் விரைந்து செயல்பட வேண்டியது தமிழக போலீசாரின் கடமை. தமிழகம் ஆன்மிக பூமி, தர்ம பூமி. எனவே, இத்தகைய மனிதாபிமானற்ற வன்முறைகள் தொடராமல் இருக்க, மாணவர்களிடையே நல்லொழுக்கம், ஆன்மிகம், உயிர்களிடத்தில் அன்பை ஏற்படுத்தும் பண்பு போன்றவற்றை வளர்க்க வேண்டும். எனவே தமிழக அரசு, தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு, மாநிலத்தில் அமைதியும், வளர்ச்சியும் ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.