வாசகர்கள் கருத்துகள் ( 2 )
டாடா கம்பெனிக்கு அடிக்கல் நாட்டிய நேரம் தீ விபத்து சகுனம் சரியில்லை
நல்ல வேளை எல்லோரும் நலம்.
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே திம்ஜேப்பள்ளி பகுதி வன்னியபுரத்தில், 500 ஏக்கரில், 'ஐ போன்' உதிரிபாகங்களை தயாரிக்கும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் உள்ளது. இங்கு மொத்தம், மூன்று 'ஷிப்ட்'களில் 20,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில், 85 சதவீதம் பேர் பெண்கள்.நிறுவனத்தில், 6,600 சதுரடி பரப்பில், மொபைல்போனின் பின்புற கவர்களின் கலரை வடிவமைக்கும் பணி மேற்கொள்ளப்படும் கெமிக்கல் பிரிவான ஆனோ பிளான்ட் இயங்குகிறது. நேற்று அதிகாலை, 5:20 மணிக்கு கெமிக்கல் பிரிவில், 523 ஊழியர்களும், மற்ற பிரிவுகளில், 3,000க்கும் மேற்பட்டோரும் இருந்தனர். அப்போது, கெமிக்கல் பிரிவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு, தீ மளமளவென பரவி கரும்புகை வெளியேறியது. ஊழியர்கள் அவசர, அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.கெமிக்கல் கலந்த புகையை சுவாசித்த, 20 முதல், 25 வயது வரையிலான, 11 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், பாதிப்பு அதிகமாக இருந்த சதீஷ்குமார், ஆஷா ஆகியோர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர்.ஓசூர், கிருஷ்ணகிரி, பர்கூர், பாலக்கோடு, பெங்களூரு விமான நிலையம் பகுதிகள் மற்றும் நிறுவனங்களில் இருந்து, 11க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. ஏழு மணி நேரத்திற்கும் மேல் போராடி மதியம், 12:30 மணிக்கு மேல், தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.தீயை முழுமையாக அணைக்கும் பணி நேற்று மாலை வரை தொடர்ந்தது. தீ விபத்தில் கெமிக்கல் பிரிவு முற்றிலும் எரிந்து நாசமானதில் நிறுவனத்திற்கு, 300 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு என, தகவல் வெளியாகியுள்ளது. நிறுவனத்தை சுற்றியுள்ள கிராமங்களிலுள்ள மக்களுக்கு எவ்வித பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தொழிலாளர்களை, கிருஷ்ணகிரி கலெக்டர் சரயு சந்தித்து ஆறுதல் கூறி, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். கெமிக்கல் பிரிவிலிருந்த, 523 தொழிலாளர்களின் மொபைல் போன் எண்ணையும் வாங்கி, அவர்களது உடல்நிலை எந்த அளவிற்கு உள்ளது என விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். வி.ஏ.ஓ.,க்கள் அப்பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்து ஏற்பட்ட பகுதியை கலெக்டர் சரயு, எஸ்.பி., தங்கதுரை, சப் - கலெக்டர் பிரியங்கா, தொழிலக பாதுகாப்பு இணை இயக்குனர் சரவணன் ஆகியோர் பார்வையிட்டனர். விபத்தால் நிறுவனத்திற்கு நேற்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டது. இது குறித்து டாடா நிறுவனம் அளித்துள்ள அறிவிப்பில், 'ஓசூரிலுள்ள ஆலையில் துரதிர்ஷ்டவசமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆலையிலுள்ள அவசரகால நெறிமுறைகள், ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தன. தீ விபத்துக்கான காரணம் விசாரணையில் உள்ளது. ஊழியர்கள் மற்றும் பிற பங்குதாரர்களின் நலன்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்' என, தெரிவித்துள்ளது.
மொபைல்போனின் பின்புற கவரின் கலரை வடிவமைக்கும் பணி, தயாரிப்பின் மூன்றாவது பிராசஸ். கெமிக்கல் சூடாகும் போது, அதை சரியான அளவில் குளிர்விக்க வேண்டும். அதில் அலட்சியமாக இருந்ததால் கெமிக்கல் அதிகளவில் சூடாகி, தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் ராயக்கோட்டை போலீசார், வேறு ஏதாவது காரணமா எனவும் விசாரிக்கின்றனர்.
டாடா கம்பெனிக்கு அடிக்கல் நாட்டிய நேரம் தீ விபத்து சகுனம் சரியில்லை
நல்ல வேளை எல்லோரும் நலம்.