தொழில்நுட்ப பிரச்னையை தீர்க்க விடுதி காப்பாளர்கள் கோரிக்கை
சென்னை: 'விடுதிகளில் 'பயோ மெட்ரிக்' தொழில்நுட்ப பிரச்னையை சரி செய்வது உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை, தேர்தலுக்கு முன் நிறைவேற்ற வேண்டும்' என, ஆதிதிராவிடர் நல விடுதி காப்பாளர்கள் மற்றும் சமையலர்கள் வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து, அவர்கள் துறை ஆணையரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ஆதிதிராவிடர் நலத்துறை கீழ் செயல்படும், 1,331 சமூக நீதி விடுதிகளில், 900க்கும் மேற்பட்ட விடுதிகளில், 'பயோ மெட்ரிக்' முறையில், மாணவர்களுக்கு உணவு வினியோகம் செய்யும் நடைமுறை உள்ளது. ஆனால், இக்கருவியில் ஏற்பட்டுள்ள, தொழில்நுட்ப கோளாறு, சிக்னல் பிரச்னையால், மாணவர்கள் பலரால், இதில் பதிவு செய்ய முடியவில்லை. இதனால், அரசு மாணவர்களுக்கான உணவு நிதியை குறைத்து வழங்குகிறது. எனவே, இப்பிரச்னையை அதிகாரிகள் விரைந்து சரி செய்ய வேண்டும். அதேபோல், காப்பாளர்கள் மன நலனை பேணும் வகையில், நிர்வாகக் குழு அமைப்பது, கடந்த நிதியாண்டில் செலவு செய்த தொகையை, அரசு திருப்பி வழங்குவது உட்பட 10 அம்ச கோரிக்கைகளை, தேர்தலுக்கு முன் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.