அந்துமணி பதில்கள் – 07.10.2026
ஜி.மைதிலி, பாலக்காடு: ஜனநாயகம் காக்க பணபலம் தேவையா? பணநாயகம் தேவையில்லை என்று தானே, தமிழக மக்கள் புதிய ஆட்சியை பொறுப்பில் அமர்த்தியுள்ளனர். அ.ரவீந்திரன், கன்னியாகுமரி: ஹிந்தி எதிர்ப்பு, ‘நீட்’ தேர்வு ரத்து இரண்டும் இல்லாத தி.மு.க., எப்படி இருக்கும்? ஏற்கனவே கட்டுமரம் ஓட்டை விழுந்து மூழ்கி கொண்டிருக்கிறது. நீங்கள் வேறு அவர்களை மேலும் அழ விடாதீர்கள் ரவீந்திரன்! ச.தேவகி, காஞ்சிபுரம்: நெசவாளர் நல்வாழ்வுக்காக, அனைவரும் கதர் ஆடை வாங்க வேண்டும் என்கிற முதல்வர் விஜயின் வேண்டுகோள், வரவேற்புக்குரியது தானே? நிச்சயமாக... இதனால் நெசவாளர்களின் வாழ்வாதாரம் மேம்படும். மேலும் கதர், பருத்தி ஆடைகள் வியர்வையை இழுக்கும் தன்மை கொண்டவை; நம் வெப்ப சீதோஷ்ண நிலையில், உடலுக்கும் ஏற்றவை. அ.மதியரசு, சென்னை: ‘உக்ரைன் போரை நிறுத்த, மோடி சிறப்பான ஆலோசனை வழங்குகிறார்’ என்று, ரஷ்ய அதிபர் புடின் கூறுகிறாரே? உலகத்திற்கே ஆலோசனை கூறும் நிலையில், நம் இந்திய பிரதமர் மோடி உள்ளார் என்பதில் நாம் அனைவரும் பெருமை கொள்வோம் மதியரசு! ஜெ.காசி, பெங்களூரு: தமிழகத்தில் வாகன ஓட்டிகள் ‘கூகுள் மேப்’ பார்த்து செல்வதால், சாலைகளில் வழிகாட்டி பெயர் பலகையே தேவையற்றது என காங்கிரஸ் எம்.பி., கார்த்தி பேச்சு? ‘கூகுள் மேப்’பை நம்பி சென்ற பலர், சாலைகளின் நடுவில் உள்ள தடுப்புகளின் தங்கள் வாகனம் மோதியும், குட்டைகளில் கார்கள் விழுந்தும் பார்த்துள்ளோமே... அதை கார்த்தி கவனிக்கவில்லை என தெரிகிறது. எம்.ராஜேந்திரன், லால்குடி: ஆசிய விளையாட்டு போட்டிகளில், இந்தியா வாங்கிய, தங்கப்பதக்கங்களில் எட்டு, பெண்கள் பெற்றதாக உள்ளதே? நம், ‘தங்க தாரகைகளுக்கு’ பாராட்டுக்கள்!