உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அந்துமணி பதில்கள் – 24.11.2026

அந்துமணி பதில்கள் – 24.11.2026

பி.ஆர்.பூஜா ரமேஷ், தஞ்சாவூர்: ‘சினிமா நட்சத்திரங்கள், அரசியல் கட்சி தொடங்கினால் மக்களுக்கு ஒன்றும் செய்யப் போவதில்லை’ என்று அ.தி.மு.க., பழனிசாமி பேசியுள்ளாரே? அ.தி.மு.க., யாரால் ஆரம்பிக்கப்பட்டது என்பதை மறந்து விட்டாரா அல்லது தன்னலனுக்காக தலைவரையே மறந்து விட்டாரா என்று புரியவில்லை! பி.வி.எஸ். கணேஷ் சுப்பிரமணி, பெரியகுளம்: அரசியல் கட்சிகள் தேர்தல் நேரத்தில் அளிக்கும் இலவச வாக்குறுதிகள், மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துகின்றனவா அல்லது அரசின் நிதிச்சுமையை அதிகரிக்கின்றனவா? இலவச வாக்குறுதிகள் எல்லாமே, கட்சிகள் வெற்றி பெற மட்டுமே பயன்படுகின்றன; மக்களுக்கு இதனால் எந்த பயனும் இல்லை. மக்களின் வரிப்பணத்தை வீணாக்கி, அரசின் நிதிச்சுமையையும் அதிகரிக்கின்றன. இலவசங்கள் அனைத்துமே, ஓட்டைப் பெறுவதற்காக மக்களுக்கு கொடுக்கும் லஞ்சம் தானே! க.சுப்பிரமணியன், தேனி: சாலை விபத்துக்களை குறைக்க, அபராதங்களை அதிகரிப்பது மட்டும் போதுமா... சாலை பாதுகாப்பு கல்வியும் அவசியமல்லவா? கட்டாயம் அவசியம். அதோடு கூட, சாலைகளின் தரமும் மிக மிக முக்கியம். பா.கயல்விழி, மதுரை: தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தலை முழுமையாக தடுக்க முடியாததற்கு என்ன காரணம்? தமிழகத்திற்கு தரை மார்க்கமாக, கடல் மார்க்கமாக, விமானங்கள் மூலம், போதாக்குறைக்கு இப்போது கூரியர் வாயிலாக வலிநிவாரண மாத்திரைகள் என, பலவழியில் போதை பொருட்கள் கடத்தி வரப்படுகின்றன. எல்லாவற்றையும் கண்காணிப்பதற்குள், காவல்துறைக்கு விழி பிதுங்குகிறது. மு.க.இப்ராஹிம், துாத்துக்குடி: பணம், பெயர், புகழ், சேவை ஆகிய நான்கில், அரசியல்வாதியின் நோக்கம் என்னவாக இருக்கும்? நீங்களே மிகச்சரியாக வரிசைப்படுத்தி விட்டீர்களே இப்ராஹிம்... கடைசியில் இருப்பது, மனம் இருந்தால் மட்டுமே! கி.முத்து ராமலிங்கம், ராமநாதபுரம்: ‘இந்தியரை திருமணம் செய்வதால் மட்டுமே, வெளிநாட்டினர் இந்திய குடியுரிமை பெற முடியாது’ என, டில்லி உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளதே? பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளிலிருந்து அரசியல் மற்றும் சமூக சீர்கேடுகளால் சிலர், சமூக வலைதளங்கள் மூலம், காதல் வலையில் ஆண் அல்லது பெண்ணை விழ வைத்து, இந்தியா வந்து திருமணம் செய்து, இங்கேயே குடியேறுவது குறையும்! ஆ.சுப்பிரமணியன், ஸ்ரீவைகுண்டம்: அமைச்சர்கள் பதவி பிரமாணம் செய்யும்போது, ‘நான் என் தாய் – தந்தை மீது ஆணையாக எந்த ஒரு ஊழலும் செய்ய மாட்டேன்’ என்று கூறினால், எப்படி இருக்கும்? அட... இது நல்ல யோசனையாக இருக்கிறதே... பெற்றோர் மீது இருக்கும் பாசத்திலாவது ஊழல் செய்யாமல் இருப்பரே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !