ஆர்.வித்யா, சென்னை: மீனவர்களின் பாதுகாப்பிற்காக, ‘கடல் ஆம்புலன்ஸ்’ திட்டத்தை கொண்டு வருவதாக, தமிழக மீன் வளத்துறை அமைச்சர் அ.ஸ்ரீநாத் அறிவித்துள்ளாரே? புயல், மழை காலங்களில் கடலுக்குள் சிக்கி, கரை திரும்ப முடியாமலும், உடல் நலக்குறைவாலும் பாதிக்கப்படும் மீனவர்களுக்கு, இந்த ஆம்புலன்ஸ் பேருதவியாக இருக்கும். தமிழகத்தின் ஏராளமான மீனவர்கள் பயனடைவர். ஜி. கோகுல கிருஷ்ணன், திருவாரூர்: ‘தமிழகத்தில் ஒழுக்கமும், நாணயமும் கெட்டு விட்டது’ என்கிறாரே, தி.மு.க., முன்னாள் அமைச்சர் துரைமுருகன்? எந்த, ‘நாணயம்’ என்று குறிப்பிடவில்லையே துரைமுருகன்! ஆர்.கோகிலா, சென்னை: கோதாவரி ஆற்றில் இருந்து ஆண்டுதோறும் கடலில் கலக்கும் உபரி நீர், 2,000 டி.எம்.சி.,யில் முதல் 3,000 டி.எம்.சி., வரையிலாமே? அதையும் கிருஷ்ணா நதி போல், தமிழகத்திற்கு அளிக்கலாமே! அ.பாரதி, ஈரோடு: மாணவர்களில், 300 குறள்களை ஒப்புவிப்போருக்கு, 5,000 ரூபாய் ஊக்கத்தொகை என்ற அரசாணை வெளியீடு குறித்து? நல்ல திட்டம். குறளை ஒப்புவிக்க மட்டுமல்லாமல், அதன் பொருளையும் அறிந்து கொண்டு கூறினால், அது மாணவர்களுக்கு வாழ்க்கைப் பாடமாக இருக்கும். கே.விஷ்ணு, அரியலுார்: ‘சொத்துக்களை பெற்ற பின், பெற்றோரை கை விட்டால் மூன்று ஆண்டுகள் சிறை’ என்ற, கேரள முதல்வரின் எச்சரிக்கை எதை உணர்த்துகிறது? சரியான எச்சரிக்கை. ஆதரவற்றோர் எண்ணிக்கை குறையும்; அவர்களது வாரிசுகளும் திருந்தி, பெற்றோரை கவனிப்பர். அ.சேகர், ராஜபாளையம்: தலைமை அனுமதியின்றி, யாரும் எதுவும் பேசக்கூடாது என்ற, அ.தி.மு.க., பழனிசாமியின் உத்தரவு பற்றி? தன்னை யாரும் விமர்சனம் செய்யக்கூடாது என்பது தான் அதன் பொருள். உங்களுக்கு ஜெர்மனி நாட்டின் ஹிட்லர் என்ற சர்வாதிகாரி நினைவுக்கு வந்தால், அதற்கு நான் பொறுப்பல்ல! க.நிஷா, சிங்கப்பூர்: ‘போதைப் பொருள் இல்லா தமிழகம்’ திட்டம், பள்ளிகளில் செயல்படுத்த, 7.20 கோடி ரூபாய் ஒதுக்கீடு பற்றி? பள்ளியிலிருந்தே மாணவர்களுக்கு போதையின் தீமையை கற்பித்தால், போதையற்ற தமிழகம் சாத்தியப்படும். இந்த திட்டத்தை கல்லுாரிகளுக்கும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கும் விரிவுபடுத்தலாம்.