வேலுார் டைடல் பார்க் திறக்கும் முன் ஹவுஸ்புல்
சென்னை:துாத்துக்குடியை போல, வேலுார் மினி டைடல் பார்க் திறப்பதற்கு முன்பே, 100 சதவீத அலுவலக இடங்களையும் ஒரு நிறுவனம் முன்பதிவு செய்துள்ளது. தமிழக அரசின் டைடல் பார்க் நிறுவனம், சிறிய நகரங்களில், 'மினி டைடல் பார்க்' அமைத்து வருகிறது. அதன்படி, வேலுார் மாவட்டம் வேலுார் மேல்மொனவூர், அப்துல்லாபுரத்தில், 32 கோடி ரூபாய் செலவில், 60,000 சதுர அடியில் நான்கு தளங்களுடன், மினி டைடல் பார்க் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்த ஆண்டு துவக்கத்தில் திறக்கப்பட உள்ளது. தற்போது, மருத்துவ துறையின் தகவல் தொழில்நுட்ப சேவையில் ஈடுபட்டுள்ள ஒரு தனியார் நிறுவனம், வேலுார் டைடல் பார்க் அலுவலகம் முழுதையும் முன்பதிவு செய்துள்ளது. இதனால், 500க்கும் மேற்பட்டோருக்கு வேலை கிடைக்க உள்ளது. துாத்துக்குடி மாவட்டம், மீளவிட்டான் கிராமத்தில், 32 கோடி ரூபாயில், 63,100 சதுர அடியில் நான்கு தளங்களுடன், மினி டைடல் பார்க் கட்டப்பட்டுள்ளது. இது, விரைவில் திறக்கப்பட உள்ளது. அதற்கு முன்னதாகவே, டைடல் பார்க்கில் உள்ள அலுவலக இடங்கள் முழுதையும் இரு நிறுவனங்கள் வாடகைக்கு எடுத்துள்ளன.