குற்றவாளியை எப்படி நடமாட விட்டீர்கள்: ஆணையம் கேள்வி
சென்னை : சென்னையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக விசாரணை நடத்த, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி, துணை செயலர் சிவானி தே ஆகியோர், சென்னை வந்தனர். பாதிக்கப்பட்ட மாணவி, அவரது பெற்றோர் மற்றும் பிற மாணவியரிடம் விசாரித்த பின், கவர்னர் ரவியையும் சந்தித்து பேசினர்.இதையடுத்து, நேற்று காலை டில்லி திரும்பினார். சென்னை விமான நிலையத்தில், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி அளித்த பேட்டி:அண்ணா பல்கலையில் ஒவ்வொரு இடமாக சென்று ஆய்வு செய்துள்ளோம். பாதிக்கப்பட்ட மாணவியிடமும் பேசினோம். அவரது பெற்றோரை சந்தித்து விபரங்களை கேட்டு தெரிந்துள்ளோம். தமிழக கவர்னரையும் சந்தித்து பேசியுள்ளோம்.மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்த விசாரணை அறிக்கையை, தேசிய மகளிர் ஆணையத்தின் வாயிலாக, மத்திய அரசிடம் சமர்ப்பிக்க உள்ளோம். இந்த விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும், நிச்சயம் அவர்களுக்கு தகுந்த தண்டனை கிடைக்கும் என்று நம்புகிறோம்.மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த குற்றவாளி மீது, ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன. இப்படிப்பட்டவரை இயல்பாக எப்படி நடமாட விட்டனர் என்பது தெரியவில்லை, தமிழக அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வியும் எழுகிறது. பெண்களுக்கு எதிராக யார் குற்றங்கள் செய்தாலும், மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.