| ADDED : ஆக 28, 2024 12:12 AM
சென்னை : மணல் கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய எத்தனை பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர் என்பது குறித்து, அறிக்கை தாக்கல் செய்யும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவர் கடந்தாண்டு ஏப்ரலில், 7,200 கிலோ ரேஷன் அரிசியை, கர்நாடக மாநிலத்துக்கு விற்க முயன்றதாக கைது செய்யப்பட்டார். இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க, மே மாதம் கிருஷ்ணகிரி கலெக்டர் உத்தரவிட்டார்.இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சத்தியமூர்த்தியின் மனைவி பூஞ்சோலை ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, 'ரேஷன் அரிசியை அரசு கிடங்கு அல்லது ரேஷன் கடையில் இருந்து கடத்தவில்லை. அவ்வாறு கடத்தியிருந்தால், அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தை அதிகாரிகள் பிரயோகித்து இருக்கலாம். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் அவ்வாறு செய்யவில்லை. தேவைப்படாத நபர்களுக்கு ரேஷன் அரிசி வழங்கக்கூடாது. அதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 'முறையாக பரிசீலித்து குண்டர் தடுப்பு சட்டத்தை, அதிகாரிகள் பிரயோகிக்க வேண்டும். இதுபோன்ற செயல்களுக்காக குண்டர் தடுப்பு சட்டத்தை பயன்படுத்தக்கூடாது' என, தெரிவித்த நீதிபதிகள், சத்தியமூர்த்தி மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்தனர்.மேலும், மணல் கடத்தல் வழக்குகளில், இதுவரை எத்தனை பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர் என்பது குறித்து, அரசு அறிக்கை தாக்கல் செய்யும்படியும், நீதிபதிகள் உத்தரவிட்டனர்.