அரசு சட்டக் கல்லுாரிகளில் காலி பணியிடங்கள் எத்தனை? அறிக்கை கோரும் உயர் நீதிமன்றம்
மதுரை:தமிழகத்தில் அரசு சட்டக் கல்லுாரிகளில் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத காலிப் பணியிடங்கள் எவ்வளவு உள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. மதுரை வழக்கறிஞர் சகா தாக்கல் செய்த பொதுநல மனு:மதுரை, தேனி, ராமநாதபுரம், காரைக்குடி, திருச்சி, திருநெல்வேலி அரசு சட்டக் கல்லுாரிகளில் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மாணவர்களின் கல்வி பாதித்துள்ளது. காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு: அரசு பல சட்டக் கல்லுாரிகளை துவக்குகிறது. அவற்றில் அடிப்படை வசதிகள் இல்லை. பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப விகிதச்சாரம் அடிப்படையில் எத்தனை பேராசிரியர்கள் இருக்க வேண்டும், தமிழகத்திலுள்ள அனைத்து சட்டக் கல்லுாரிகளிலும் எத்தனை மாணவர்கள் படிக்கின்றனர், அவற்றில் பேராசிரியர்கள் எத்தனைபேர் பணிபுரிகின்றனர், பொறுப்பு முதல்வர்கள் இல்லாமல் முழுநேர பணியில் முதல்வர்கள் உள்ளனரா, கவுரவ மற்றும் முழுநேர பேராசிரியர்கள் எத்தனை பேர் உள்ளனர், ஆசிரியரல்லாத பணியிடங்களில் எத்தனை பேர் உள்ளனர், அவற்றில் எத்தனை காலிப் பணியிடங்கள் உள்ளன என்ற விபரங்களை சட்டக் கல்வி இயக்குனர் அக்., 3ல் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.