உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணி எவ்வாறு நடக்கும்? தேர்தல் கமிஷன் விளக்கம்

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணி எவ்வாறு நடக்கும்? தேர்தல் கமிஷன் விளக்கம்

சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி தொடர்பான வழிகாட்டி கையேட்டை, இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.அதில் கூறப்பட்டு உள்ளதாவது: ஒவ்வொரு தேர்தலுக்கு முன் அல்லது தேவைப்படும்போது வாக்காளர் பட்டியல் திருத்தப்பட வேண்டும். ஏற்கனவே, 1951 முதல் 2004ம் ஆண்டு வரை, எட்டு முறை சிறப்பு திருத்தப் பணிகள் நடந்துள்ளன. கடைசியாக, 2002 - 2004ம் ஆண்டு சிறப்பு திருத்தப்பணி நடந்தது. இதற்கிடையில், தொடர்ச்சியான இடமாற்றம், ஒரே வாக்காளர் பல இடங்களில் பதிவு, இறந்த வாக்காளர்கள் நீக்கப்படாதது, வெளிநாட்டவர்களின் தவறான சேர்ப்பு ஆகிய குறைகள் உள்ளன.இவற்றை சரிசெய்ய வேண்டியுள்ளது. ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், 1,200 வாக்காளர்கள் இருக்க வேண்டும். வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொள்வதற்கு ஓட்டுச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும், ஒரு வாக்கா ளர் பதிவு அலுவலர் நியமிக் கப்பட்டு உள்ளார். வரைவு வாக்காளர் பட்டியல் தயாரித்தல், கோரிக்கைகள் மீது முடிவெடுத்தல், இறுதி வாக்காளர் பட்டியலை தயாரித்து வெளியிடுதல், இவர்களின் பணி.ஒவ்வொரு வட்டத்திற்கும், ஒரு உதவி வாக்காளர் பதிவு அலுவலரும் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த அக்டோபர் 27ம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ள, ஒவ்வொரு வாக்காளருக்கும் தனித்துவமான கணக்கெடுப்பு படிவங்கள் அச்சிடப்பட்டு உள்ளன. இந்த கணக்கெடுப்பு படிவங்களில், தற்போதைய வாக்காளர் பட்டியலில் உள்ள தேவையான விபரங்கள் இடம்பெற்று இருக்கும்.ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், தற்போதைய வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவங்களை, இன்று முதல் வழங்குவர். அதன்படி, வாக்காளர் அல்லது அவர்களது உறவினர் பெயரை, 2002 - 2004ம் ஆண்டு வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலுடன் இணைத்து சரிபார்ப்பர். இதற்கான தகவல்களை சரிபார்ப்பதற்கு, இந்திய தேர்தல் ஆணையம், https://voters.eci.gov.in என்ற தரவு தளத்தை உருவாக்கியுள்ளது. கணக்கெடுப்பின்போது, புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கோருபவர்களுக்கு, படிவம் 6 மற்றும் அதற்கான உறுதிமொழி படிவத்தையும், ஓட்டுச் சாவடி அலுவலர்கள் வழங்குவர்.படிவத்தை நிரப்பவும், அவர்கள் உதவுவர். பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை, வாக்காளர் பதிவு அலுவலர் பெற்றுக் கொள்வார். இதற்காக, ஒவ்வொரு வீட்டிற்கும் குறைந்தது மூன்று முறை சென்று, இறந்தவர்கள், நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்தவர்களை கண்டறிவர். வாக்காளர்கள் குறிப்பாக நகர்ப்புற வாக்காளர்கள் அல்லது தற்காலிகமாக இடம் பெயர்ந்தவர்கள், இணைதயதளம் வாயிலாகவும் கணக்கெடுப்பு படிவத்தை நிரப்பலாம். கணக்கெடுப்பு படிவம் தவிர, வேறு எந்த ஆவணங்களும் கணக்கெடுப்பு காலத்தில் சமர்ப்பிக்க தேவையில்லை. கணக்கெடுப்பு படிவத்தில் வாக்காளரின் பெயர், அடையாள அட்டை எண், முகவரி ஆகியவை முன்பே அச்சிடப்பட்டு இருக்கும். வரிசை எண், பகுதி எண், பெயர், சட்டசபை, லோக்சபா தொகுதி பெயர், மாநிலம் ஆகிய விபரங்களும் அச்சிடப்பட்டு இருக்கும். கியூ. ஆர்., குறியீடும் இடம்பெற்று இருக்கும். பழைய புகைப்படம் முன்பே அச்சிடப்பட்டு இருக்கும்.புதிய புகைப்படத்தை ஒட்டுவதற்கும் இடம் விடப்பட்டு இருக்கும். அனைத்து வாக்காளர்களும் தங்களது சமீபத்திய கலர் போட்டோவை ஒட்ட வேண்டும். இதை தொடர்ந்து, படிவத்தில் தங்களது பிறந்த தேதி, ஆதார் எண், மொபைல் போன் எண், தந்தை அல்லது பாதுகாவலர் பெயர், அவர்களது வாக்காளர் அடையாள அட்டை எண், தாயின் பெயர். தாயின் வாக்காளர் அடையாள அட்டை எண், கணவர், மனைவி பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண் உள்ளிட்ட, கடந்த 2002 - 2004ம் ஆண்டு நடந்த சிறப்பு திருத்த பணியின்போது இருந்த விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.புதிய வாக்காளர்கள் சேர்க்கைக்கு, படிவம் 6 மற்றும் உறுதிமொழி படிவத்தை நிரப்ப வேண்டும். அதே சட்டசபை தொகுதியை சேர்ந்த வாக்காளராக இருந்தால், நீக்கம் செய்வதற்கு படிவம் 7 நிரப்ப வேண்டும். திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் தொடர்பாக, படிவம் 8 பூர்த்தி செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Padmasridharan
நவ 05, 2025 15:32

இவ்வளவும் செய்து பயனில்லாத NOTA வை அழுத்தணுமா சாமி. அநீதி காவல் அரசியலை 5 ஆண்டுக்கு முன்னரே இறக்கிவிட உரிமை கூட இல்லையே. ஆண்களும் பெண்களும் சரி சமமென்று சொல்லி பெண்களை இலவச பயணங்களுக்கு அடிமையாக்கியுள்ளனரே.


புதிய வீடியோ