உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிலை கடத்தல் வழக்கு கோப்பு மாயமான விவகாரம்; வேறு அதிகாரியை நியமிக்க உத்தரவு

சிலை கடத்தல் வழக்கு கோப்பு மாயமான விவகாரம்; வேறு அதிகாரியை நியமிக்க உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சிலை கடத்தல் வழக்குகளின், முதல் தகவல் அறிக்கைகள் காணாமல் போனது தொடர்பான விசாரணையை கண்காணிக்க, வேறு ஒரு போலீஸ் அதிகாரியை நியமிக்க, தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞரான யானை ராஜேந்திரன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், 'தமிழகத்தில், 300 கோடி ரூபாய் மதிப்பிலான, 41 சிலைகள் கடத்தல் தொடர்பான வழக்கின் ஆவணங்கள் காணாமல் போய் விட்டன. சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் இருந்து, இந்த ஆவணங்கள் திருடப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்' என்று கோரியிருந்தார்.இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான, திருடப்பட்ட கோப்புகளை மீட்டு, இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை தமிழக அரசு சரிவர பின்பற்றவில்லை எனக்கூறி, உச்ச நீதிமன்றத்தில் யானை ராஜேந்திரன் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது, தமிழக அரசு, 'காணாமல் போன முதல் தகவல் அறிக்கைகளில், 11 முதல் தகவல் அறிக்கைகள் மட்டும் இதுவரை மீட்கப்படவில்லை. அதற்கு பதிலாக மீண்டும் புதிதாக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது' என, தெரிவித்தது. இதையடுத்து, 'இந்த விவகாரத்தில், ஒரு வார காலத்திற்குள் விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும். அந்த விசாரணையை மேற்பார்வை செய்வதற்காக, மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரி நியமிக்கப்பட வேண்டும். அதுகுறித்த அறிக்கையை பிரமாண பத்திரமாக அடுத்த விசாரணையின் போது தாக்கல் செய்ய வேண்டும்' என, முந்தைய விசாரணையின் போது நீதிபதிகள் தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெடே மற்றும் வழக்கறிஞர் சபரி சுப்பிரமணியன் ஆகியோர், 'உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, விழுப்புரம் மாவட்டத்தில் பணியாற்றும் திஷா மிட்டல் என்ற ஐ.பி.எஸ்., அதிகாரி, இந்த விவகாரத்தில் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். ஆனால், அவர் திடீரென மருத்துவ விடுப்பில் சென்றதால், அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்' என்று, கோரிக்கை விடுத்தனர். அப்போது குறுக்கிட்ட மனுதாரரான வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், 'ஏற்கனவே நான்காண்டுகளுக்கு மேலாக, இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. எனவே, கால அவகாசம் மிகக் குறுகியதாக இருக்க வேண்டும்' என்றார்.இதையடுத்து, 'ஏப்ரல் இறுதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, நீதிபதிகள் கூறியபோது குறுக்கிட்ட தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்கள், 'சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரி ஏப்ரல், 16ம் தேதி தான் விடுப்பில் இருந்து, மீண்டும் பணியில் சேருகிறார். எனவே, ஏப்ரல் இறுதிக்குள் அறிக்கையை தாக்கல் செய்வது சிரமமானது' என்றனர்.உடன் நீதிபதிகள், 'அதற்காக எல்லாம், இவ்வளவு நாள் நிலுவையில் உள்ள வழக்கை கிடப்பில் போட்டு வைக்க முடியாது. வேண்டுமென்றால், வேறு ஒரு அதிகாரியை விசாரணைக்காக அரசு நியமிக்கலாம். எதுவாக இருந்தாலும், அடுத்த மாதம், 2ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரி வழக்கு விசாரணை தொடர்பான அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்' என்று உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

sankaranarayanan
ஏப் 08, 2025 11:27

இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது இது முற்றிலும் மாபெரும் தவறு செய்த ஆட்சியாளர்களை பிடிக்க வேண்டு அவர்களுக்கு தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும் ஆட்சியாளர்கள் சொல்லாமல் எந்த போலீசு அதிகாரியும் அல்லது எந்த கீழ்ப்பட்ட அதிகாரிகளும் அவர்களாகவே இது போன்ற செயலில் ஈடுபடவே மாட்டர்கள் ஆட்சியாளர்கள் செய்யும் தவறுகளுக்கெல்லாமே அவர்களுக்கு கீழே உள்ள அதிகாரிகள்தான் தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கிறது இது முற்றிலும் மாற வேண்டும்


அருண் பிரகாஷ் மதுரை
ஏப் 08, 2025 07:49

அடுத்த வாய்தாவில் சிலை கடத்தல் வழக்கு சம்பந்தமாக பதிவு செய்யப்பட்டு திருடு போன முதல் தகவல் அறிக்கையை கண்டுபிடிக்க 5 பேர் கொண்ட குழு அமைத்து இருக்கிறோம். அந்த குழு அது தொடர்பான அறிக்கை அளித்ததும் தங்களிடம் அளிக்கிறோம் என்பார்கள். மேலும் காணாமல் போன முக்கியமான முதல் தகவல் அறிக்கை கிடைக்கும் வரை காணாமல் போன சிலைகள் தொடர்பான சாதாரண வழக்கை கால வரையின்றி ஒத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைப்பார்கள்.


அப்பாவி
ஏப் 08, 2025 07:41

ஆன்லைன், கம்பியூட்டர் டிஜிட்டல் ஆவணங்கள பத்தி இதில் சம்பந்தப்பட்ட தத்திகளுக்கு தெரியவே வாய்ப்பில்லை. எல்லோரும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் படிச்சுட்டு வேலைக்கு வந்தவங்க.


Varadarajan Nagarajan
ஏப் 08, 2025 06:54

புதிதாக கோப்புகள் உருவாக்கப்படும்போது சிலையே காணாமல்போகவில்லை என ஆவணங்கள் தயார்செய்யப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அரசு நிர்வாகம் அவ்வளவு சிறப்பாக நடைபெறுகின்றது


M R Radha
ஏப் 08, 2025 06:42

த்ரவிஷன்கள் ஆட்சியில் கொள்ளையோ கொள்ளை. ஒரே தீர்வு அண்ணாமலையாரின் ராமராஜ்ய ஆட்சிதான்


Balasubramanian
ஏப் 08, 2025 05:19

சிலையே திருடு போயிருக்கு யுவர் ஆனர்! இதில் கோப்புகள் திருட்டு போனதைப் பற்றி கவலை எழுப்புகிறார்கள்! அந்த இரண்டு திருட்டு சம்பந்தமாக ஒரு புது கோப்பு தயார் செய்து ஆய்வு செய்து வருகிறோம்! அதுவரை சிறிது வாய்தா கொடுங்கள் ப்ளீஸ்!


சமீபத்திய செய்தி