மலைப்பகுதிகளை பாதுகாக்காவிட்டால் பின்விளைவுகள் பேரழிவாக இருக்கும்: அரசுக்கு ஐகோர்ட் அறிவுரை
சென்னை: 'மலைப்பகுதிகள், வனப்பகுதிகள் ஆகியவற்றை பாதுகாப்பதற்கான சிறப்பு சட்டங்கள் மற்றும் விதிகளை கண்டிப்புடன் பின்பற்றுமாறு, மலைப்பகுதியில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் அனுப்ப வேண்டும்' என, தமிழக அரசின் தலைமை செயலருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நீலகிரி மாவட்டம், ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கட்டடம் கட்ட, லோகநாதன் என்பவர், கடந்த 2019ல் அளித்த விண்ணப்பத்தின் மீது, எட்டு வாரங்களில் தகுந்த உத்தரவு பிறப்பிக்கும்படி, கடந்த 2020ல், சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டார்.இந்த உத்தரவை எதிர்த்து, ஊட்டி நகராட்சி கமிஷனர் தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், முகமது ஷபீக் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நகராட்சி கமிஷனர் தரப்பில், 'சட்டப்படி, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் எல்லையில் இருந்து, 150 மீட்டர் துாரத்துக்குள் கட்டடம் கட்ட அனுமதி வழங்கக் கூடாது. எனவே, 17 மீட்டர் துாரத்துக்குள் வரும் பகுதியில் கட்டடம் கட்ட அனுமதி வழங்கும்படி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என தெரிவிக்கப்பட்டது.அதற்கு லோகநாதன் தரப்பில், 'திருத்தப்பட்ட மாஸ்டர் பிளான் அரசால் அங்கீகரிக்கப்பட்டு உள்ளது; எனவே, அந்த விதி பொருந்தாது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட மாஸ்டர் பிளானின் அடிப்படையில் கட்டட திட்ட அனுமதியைப் பெற உரிமை உள்ளது' என தெரிவிக்கப்பட்டது.இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:மலைப்பகுதிகள், வனப்பகுதிகள் ஆகியவற்றை பாதுகாக்க கொண்டு வரப்பட்ட விதிகளுக்கு முரணாக, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு உள்ளதால், அதை ரத்து செய்கிறோம்.இந்த விதிகளை மீறினால், சுற்றுச்சூழல் பாதிக்கும் என்பதால், அதிகாரிகள் கவனமுடன் விதிகளை பின்பற்ற வேண்டும். தவறும் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.மலைப்பகுதிகளை பாதுகாக்காவிட்டால் பின்விளைவுகள் பேரழிவாக இருக்கும். இது சம்பந்தமான சிறப்பு சட்டங்களையும், விதிகளையும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என, மலைப்பகுதியில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு, தலைமை செயலர் அறிவுறுத்தல்களை அனுப்ப வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.