உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மோசடி பத்திரங்களை ஐ.ஜி., ரத்து செய்யலாம்: மத்திய அரசின் புதிய சட்டத்தில் வழிவகை

மோசடி பத்திரங்களை ஐ.ஜி., ரத்து செய்யலாம்: மத்திய அரசின் புதிய சட்டத்தில் வழிவகை

சென்னை : போலி ஆவணம், ஆள்மாறாட்டம் வாயிலாக பதிவு செய்யப்பட்ட மோசடி பத்திரங்களை ரத்து செய்ய, மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய பதிவு சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது. உரிமையாளருக்கு தெரியாமல் போலி ஆவணம், ஆள்மாறாட்டம் வாயிலாக சொத்துக்களை அபகரிக்க, மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. அதுபோன்ற பத்திரங்களை ரத்து செய்ய உண்மையான உரிமையாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அழைப்பு

மோசடி குறித்து காவல் துறை விசாரித்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுத்தாலும், பத்திரம் ரத்து செய்யப்படுவது இல்லை. 'உரிமையியல் நீதிமன்ற உத்தரவு பெற்று வந்தால் மட்டுமே ரத்து செய்வோம்' என, பதிவுத் துறை கூறிவந்தது. இதனால், மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் சொத்தை மீண்டும் பெற முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது. இதை கருத்தில் வைத்து, தமிழக அரசு, பதிவு சட்டத்தில் சில பிரிவுகளை திருத்தம் செய்தது. இந்த சட்டத்திருத்தம், 2022 ஆக., 16ல் அமலுக்கு வந்தது. இதன்படி, மோசடி பத்திரங்களை கண்டுபிடித்து, மாவட்ட பதிவாளரே ரத்து செய்ய வழிவகை ஏற்பட்டது. அதன்படி, 11,000 புகார்கள் வந்ததில், 1,100 பத்திரங்களை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டது. சிலர் வழக்கு தொடர்ந்த போது, சட்ட திருத்தத்துக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. அதனால், மோசடி பத்திரங்கள் தொடர்பான புகார்களை விசாரிக்காமல் பதிவுத் துறை நிறுத்தி வைத்தது. தற்போது, 1908ம் ஆண்டு பதிவு சட்டத்துக்கு மாற்றாக, 2025ம் ஆண்டு பதிவு சட்டம் என்ற புதிய சட்டத்தை, மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. அதன் வரைவு ஆவணத்தை, மக்கள் கருத்து தெரிவிக்க ஏதுவாக, மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. இதற்கு பொது மக்கள், 30 நாட்களுக்குள் கருத்து தெரிவிக்க அழைப்பு விடப்பட்டுஉள்ளது.

மாற்றம் என்ன?

இதுகுறித்து, பதிவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்போதைய, 'டிஜிட்டல்' சூழலுக்கு ஏற்ப, பத்திரப்பதிவு பணிகளை துல்லியமானதாகவும், எளிதாகவும் மேற்கொள்ள, இந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது. பத்திரப்பதிவில் இதுவரை காணப்பட்ட குழப்பங்களுக்கு தீர்வாக, இதில் புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக, புதிய சட்டத்தின் வரைவு ஆவணத்தில், 64வது பிரிவில் பத்திரங்களை ரத்து செய்வதற்கான நடைமுறைகள் விளக்கப்பட்டு உள்ளன. இதில் தவறான தகவல்கள் அடிப்படையில் பதிவான பத்திரங்களை ரத்து செய்யலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவுத் துறை ஐ.ஜி., இதற்கான அதிகாரம் பெற்றவர் என்றும் கூறப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாது, தவறான தகவல்கள் அடிப்படையில் தாக்கலாகும் பத்திரங்களை ரத்து செய்ய, சார் - பதிவாளர்களுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. இப்புதிய சட்டம் அமலுக்கு வந்தால், மோசடி பத்திரங்களை ரத்து செய்ய, உரிமையியல் நீதிமன்றங்களை அணுக வேண்டிய தேவை எழாது. இவ்வாறு அவர் கூறினார்.

கருத்து தெரிவிப்பது எப்படி?

பத்திரப்பதிவுக்கான, 1908ம் ஆண்டு சட்டத்துக்கு மாற்றாக, 2025ம் ஆண்டு பதிவு சட்டத்தின் வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் நிலவளத் துறை, இந்த வரைவை வெளியிட்டுள்ளது. இதன் வாயிலாக, 117 ஆண்டு பழமையான பதிவு சட்டத்தை ஒட்டுமொத்தமாக புதுப்பிக்க வழி ஏற்பட்டுள்ளது. இந்த வரைவை, https://dolr.gov.in/ என்ற இணையதளத்தில், பொது மக்கள் பார்வையிடலாம். இது குறித்து தங்கள் கருத்துகளை, 30 நாட்களுக்குள், sanand.gov.inஎன்ற இ - மெயில் முகவரியில் தெரிவிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

T B LEEMA
மே 29, 2025 20:44

மத்திய அரசு மசோதா இயற்ற வேண்டும் போலி பத்திரம் ஜஜி ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்


T B LEEMA
மே 29, 2025 20:38

திருவள்ளூர் மாவட்டத்தில் கடம்பத்தூர் வட்டம் பிஞ்சிவாக்கம்கிராமம்பல போலி பத்திரம் பதிவு செய்யப்பட்டு உள்ளது.உண்மையான சொத்து உரிமையாளர்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டு இருக்கின்றோம்.வருவாய்த்துறை போலி பட்டா போட்டு தருகிறார்கள் லஞ்சம் பெற்று பத்திரப்பதிவு துறை போலி பத்திரம் போட்டு தந்து இருக்கிறார்கள் இறந்து போனவர்கள் பெயரில் கிரையம்.பவர் 1998 பண்ணிய வில்லங்க சான்றிதழ் பெயர் இல்லை. 2025 கிரையம் நடந்து உள்ளது. 18 நபர்கள் எத்தனனயோ நபர்கள் இறந்தபின் எப்படி கிரையம் வந்ததுவரை அதிகம் போலி ஆவணம் நில மாஃபியா செய்துள்ளார்கள்.சார்பதிவாளர் பேரம்பாக்கம் அலுவலகத்தில் அதிகம் போலி ஆவணம் ஆள்மாறாட்டம் வாரிசுகள் கையொப்பம் இல்லாமல் இறப்பு சான்றிதழ் இல்லாமல் வாரிசு சான்றிதழ் இல்லாமல் பல மோசடிகள் எங்கள் சொத்து 100 ஏக்கர் மேல் போலி ஆவணம் செய்தது கண்டுபிடித்து உள்ளோம்.1982,1984 வரை போலி பத்திரம் செய்தது அம்பலம் மத்திய அரசு உடனடியாக மசோதா பத்திரம் பதிவு ஜஜி ரத்து செய்ய தமிழக அரசுக்கு ஆனண இடவேண்டும். மாவட்ட பதிவாளர் இடம் வேண்டாம். வருவாய் துறை வேண்டாம். பத்திரப்பதிவு ஜ ஏ ஸ் முன்னிலையில் ரத்து நடவடிக்கை மசோதா உடனடியாக மத்திய அரசு குடியரசுத் தலைவர் இயற்ற வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி.


GMM
மே 29, 2025 08:20

தவறான, குறைபாடுகள் உடைய, தகவல்கள் அடிப்படையில் பதிவான பத்திரங்களை எப்போதும் ரத்து செய்ய மாவட்ட பதிவாளர் மற்றும் பதிவுத்துறை ஐ.ஜி., அதிகாரம் அவசியம். சார் - பதிவாளர் மூலம் தான் பத்திர பதிவு தவறு ஆரம்பம். இதனை அவர் விசாரிப்பது சரியாக இருக்காது? மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள் விசாரிக்க அனுமதிக்கலாம். இந்த விசாரணையில் குறை இருந்தால், ஆதாரம் அடிப்படையில் பாதிக்க பட்ட நபர் உரிமையியல் நீதிமன்றம் செல்லலாம். தீர்வு வரும் வரை சொத்து தாசில்தார் பராமரிப்பில் இருக்க வேண்டும். வாதி பிரதிவாதி வெளியேற வேண்டும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகள், ஆண்டு பராமரிப்பு தொகை இருவரும் சம அளவில் தாசில்தார் கணக்கில் செலுத்த வேண்டும். ஒரு நீதிமன்றம் ஓராண்டில் விசாரணை முடிக்க வேண்டும். இல்லாத போது நிர்வாக விசாரணை முடிவை ஏற்க வேண்டும்.


Chanemougam Ramachandirane
மே 29, 2025 07:54

நல்ல விசயம் வரவேற்போம் அதே போல் நில ஆணையம் ஏற்படுத்தனும் காலத்தின் கட்டாயம் அதற்கான சட்டத்தை ஏற்படுத்தனும் முதலில் பத்திர பதிவில் அனைத்து வருவாய் துறைக்கு சொத்தின் உரிமையாளர் ஆதார் எண் தொடர்பு எண் இணைக்கணும் என்று சுற்றறிக்கை செயுங்கள் வருவாய் பெறுவதற்கு அறியலாம் குடும்ப அட்டையில் இருக்கும் இடம் சொந்தம் அல்லது வாடகை, பொருளாதாரம் வருவாய் என்பதினை பதியுங்கள் மேலும் அரசு சேவை பெறுவதை முழுவதும் பதியுங்கள் பார்த்தவுடன் தெரியும் படி இருந்தால் வழக்கு வந்தால் அவர்களின் குடும்ப அட்டையை பார்த்தாலே நீதிபதிகள் தீர்ப்பு வழங்கலாம். முக்கியமாக எல்லா துறையிலும் லீகல் அதிகாரி நியமித்து அவர்கள் பரிந்துரையுடன் எந்த சேவையும் செயல்படனும் பதிவு துறையில் வரும் ஆவணங்களை லீகல் பெற்றவுடன் தான் பதியனும் என்றாலே மக்கள் வரவேற்பார்கல் காரனும் காலம் கடந்து சொத்து பிரச்சனைகள் ஆவதை தடுக்கலாம் சட்ட ரீதீயான நபர்கள் தான் அவர்கள் பெயரில் சேவை பெற முடியும் என்பதினை உறுதி செய்யணும் அரசு அலுவலகங்களில் எந்த மனுவும் முன்னோரிமை அடிப்படையில் செயல்படனும் அதற்கு சிடிஸின் சார்ட்டர் ஒவ்வுறு அலுவலகத்திலும் மக்கள் அறிந்து கொள்ளும் படி வெளிப்படுத்தனும் காலம் தாழ்த்தும் அதிகாரி மேல் நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும். காவல் துறையில் மக்கள் சார்ந்து குழு ஏற்படுத்தி புகார்களை பெறவும் விசாரிக்கவும் தனி அலுவலகத்தை ஏற்படுத்தனும் அதுவும் காவல் ஆணையம் மேற்பார்வையில் செய்ல்படனும் இதுவெல்லாம் தான் நிர்வாகத்தில் முதலில் மத்திய மாநில அரசு சீர் செய்ய வேண்டிய முதல் பணியாக இருக்கவேண்டும். அரசு அதிகாரிகள் சேயும் தவறால் மக்கள் யாரும் நீதிமன்றத்திற்கு போக கூடாது துறை இயல் தான் பொறுப்பு என்பதினை உறுதி செய்யணும் இதை நிர்வாக சீர்திருத்தம் செயல்படுத்தனும்


புதிய வீடியோ