சட்டவிரோத பிளக்ஸ் போர்டுகள்; கடமை தவறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை: ஐகோர்ட் எச்சரிக்கை
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: சட்டவிரோதமாக அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் போர்டுகளை உடனடியாக அகற்ற வேண்டும். கடமையை தவறும் அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க நேரிடும் என ஐகோர்ட் மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் போர்டுகள், அலங்கார வளைவுகளை அகற்ற உத்தரவிட கோரி ஐகோர்ட் மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 12 ) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: சட்டவிரோதமாக அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் போர்டுகளை அகற்றுவது வருவாய்த்துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் போலீசாரின் கடமை.* சட்டவிரோத பேனர்கள், அலங்கார வளைவுகளை அகற்ற வேண்டும். * அகற்ற தவறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அபராதம் விதித்து அவர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்ய உத்தரவிடலாம் என கருதினோம். இருந்தபோதிலும் அதை தவிர்க்கிறோம். * இந்த விவகாரத்தில் கடமை தவறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை மற்றும் கிரிமினல் நடவடிக்கையை உயரதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து, சட்டவிரோதமாக அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் போர்டுகளை அகற்றிவிட்டு ஆகஸ்ட் 20ல் அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.