கோவை,நீலகிரியில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
சென்னை: கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் 2 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு; அடுத்த 48 மணிநேரத்தில் ஒடிசா-மேற்கு வங்க கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.தமிழகத்தில் நாளை(ஆக.26) ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிமீ வேகத்தில் வீசக்கூடும்.ஆக.27 மற்றும் ஆக.28 ஆகிய இரு நாட்களில் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் குறிப்பாக நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும்.ஆக. 29ம் தேதி முதல் ஆக.31ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். சென்னையில் இன்றும் (ஆக.25) நாளையும் (ஆக.26) லேசான மழை பெய்யும். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.