உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அந்த சில நிமிடங்களில்... சாவை நேரில் கண்ட சாட்சிகள் பேட்டி

அந்த சில நிமிடங்களில்... சாவை நேரில் கண்ட சாட்சிகள் பேட்டி

நமது நிருபர்

த.வெ.க., தலைவர் விஜய், கரூரில் பரப்புரை செய்தபோது ஏற்பட்ட அசம்பாவிதத்தின்போது நடந்தது என்ன?நேரில் பார்த்தவர்கள் விவரிக்கின்றனர்.

'சந்தேகம் வருதுங்க'

ரவி, பரமத்தி: இரவு 7 மணிக்கு விஜய் வந்து விட்டார். கை காட்டவோ எதுவும் செய்யவோ இல்லை. ரோடுஷோ நடத்த அனுமதி இல்லை. ரோடு அகலம் குறைவு. இந்தப்பக்கம் 15 அடி, அந்தப்பக்கம் 15 அடி. அதிலும் 5 அடி தடுப்பு வைத்து விட்டனர். 10 அடியில்தான் மக்கள் நிற்கின்றனர்.இடையே ஆம்புலன்ஸ் வந்ததால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. செருப்பு துாக்கி அடிப்பது, வார்த்தைகள் பேசுவது போன்ற சம்பவங்களும் நடந்துள்ளன. எல்லா காவலர்களையும் குறை சொல்ல முடியாது.தடியடி நடத்த யார் அனுமதி கொடுத்தது எனத் தெரியவில்லை. அவர்களே கலைந்து போயிருப்பார்கள். 10, 15 ஆம்புலன்ஸ்கள் லைட்டே போடாமல் வெறுமனே வந்தன. சிலர் சந்தில் இருந்து ஓடி வந்தனர். அவர்கள் யார்? சில பையன்களை வாயிலேயே குத்தி இருக்கின்றனர். டி--ஷர்ட் கிழிந்திருக்கிறது. அப்படியானால் சதி நடந்திருக்க வாய்ப்பிருக்கிறதுதானே.இதை சி.பி.ஐ., விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். சம்பவம் நடந்ததுமே, செந்தில்பாலாஜி வருகிறார். அடுத்த அரை மணி நேரத்தில் அமைச்சர் மகேஷ் வருகிறார். ஒரு மணி நேரத்தில் உதயநிதி வருகிறார். அடுத்தநாள் காலை முதல்வர் வருகிறார். இவையெல்லாம் சந்தேகத்தை எழுப்புகின்றன.இனி நடக்கக்கூடாது என்பதல்ல. யார் பின்னணியில் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிய வேண்டும். ஒரு நபர் கமிஷன் அமைத்தது ஏன்? சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும். ரவுண்டானாவில் அனுமதி கேட்டிருந்தனர். அங்கே ஒரு லட்சம் பேர் கூடலாம். இங்கு எதுக்கு அனுமதி கொடுத்தார்கள். காவல்துறையை முழுக்க, முழுக்க குற்றம் சொல்ல முடியாது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

'இரு தரப்பும் பொறுப்பேற்கணும்'

தியாகராஜன் கரூர்: பிடித்தவர்களை பார்க்க மக்கள் ஆர்வம் காட்டுவது இயல்பு. கூட்டம் முண்டியடித்துக் கொண்டிருந்தது. விஜய் கால் மணி நேரம் பேசியிருப்பார். விளக்கும், ஆடியோவும் கட் ஆகி விட்டன.கூட்டம் நெருக்கியடித்தது. என் அருகிலும் இளம்பெண் ஒருவர் கை குழந்தையுடன் நின்றிருந்தார்; எச்சரித்தேன். இளைஞர்கள் குடித்திருந்தனர். கட்சி, அரசு என இருதரப்பிலும் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும்.

'உண்மையை கண்டறியணும்'

தினேஷ், கரூர்: மக்கள் தண்ணீர் கேட்டதும் விஜய் பாட்டில்களை வீசினார். ஒவ்வொருத்தராக மயக்கம் போட ஆரம்பித்தனர். நான் கிளம்பி வீட்டுக்குச் சென்றேன். பாதி வழியிலேயே வீட்டில் இருந்து போன் வந்தது. கூட்டத்தில் சிலர் இறந்து விட்டதாக தகவல் வந்தது. அரை மணி நேரத்துக்குள் எப்படி அவ்வளவு உயிரிழப்பு எனத் தெரியவில்லை.குடும்பம் குடும்பமாக, குழந்தைகளுடன் வந்திருந்தது பெரும் பிரச்னை. கூட்டத்தில் என்ன நடந்தது என யாருக்கும் தெரியாது. யார் பொறுப்பு என இப்போது கூற முடியாது. ஏன், எப்படி என உண்மையைக் கண்டறிய வேண்டும். இது இப்படியே தொடரக்கூடாது.

'சனிக்கிழமையை தவிர்த்திருக்கலாம்'

ரமேஷ்குமார், கரூர்: விஜய் வருவதற்கு முன், இளைஞர்கள் கொடியோடு ஆடிப் பாடிக் கொண்டிருந்தனர். விஜய் வந்ததும், அங்கிருந்த கூட்டம், இங்கு குவியத் தொடங்கி, தள்ள ஆரம்பித்தனர். நானும், மனைவியும் வெளியேறி, வீடு திரும்பி விட்டோம். ஒரு ஸ்கிரீன் அமைத்து ஒளிபரப்பி இருக்கலாம். நிறைய பேர் மரத்தில் ஏறியதால், அது முறிந்து விழுந்தது.இதே இடத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பிரசாரம் செய்தபோதும், கூட்டம் இருந்ததே. அவர் வரும்போது, சற்று இடைவெளி விட்டு, மக்கள் பார்த்தார்கள். இங்கு, அருகில் சென்று பார்க்க வேண்டும் என முண்டியடித்ததால் இவ்வளவு பிரச்னை.எல்லோரும் ரசிகர்கள் கிடையாது. ஒரு முறையாவது பார்த்து விடலாம் என எல்லா கட்சிக்காரர்களும் வந்திருந்தனர். இது, கமர்ஷியல் ஏரியா. சனிக்கிழமை வெகு பிஸியாக இருக்கும். சனிக்கிழமை கூட்டம் போட்டிருக்கக்கூடாது. வேறு நாளில் போட்டிருக்கலாம்.

'இட வசதி போதவில்லை'

ராஜேஸ்வரி, கரூர்: இங்கு நின்றிருந்த கூட்டத்துடன், விஜய் வேனுக்குப் பின்னால் வந்த கூட்டமும் சேர்ந்து கொண்டதால், நெரிசல் அதிகரித்தது. வெளியே செல்ல இங்கு இடம் இல்லை. இதுவரை இங்கு இதுபோன்று நடந்ததில்லை; அந்த சில நிமிடங்களில் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. இன்னும் அதிர்ச்சியாக உள்ளது. இடவசதி போதவில்லை.

'இந்த முறை ஆட்சி மாறணும்'

ஜீவானந்தம், கரூர்: வந்தது சினிமா ரசிகர்களாவே இருக்கட்டும். போலீஸ் தடியடி நடத்தினால் நாங்கள் வாங்க வேண்டுமா. நாங்களும் மைக் கட்ட வேண்டுமல்லவா. தி.மு.க.,வுக்கு மட்டும் தெளிவாக செய்கிறீர்களே, நாங்கள் செய்யக்கூடாதா. இதுவரைக்கும் தி.மு.க.,வுக்குத்தான் ஓட்டுப்போட்டேன். இந்த முறை ஆட்சி மாறணும். 2026ல் விஜய் கண்டிப்பாக ஆட்சிக்கு வரணும். விஜய்க்கு எவ்வளவு வருத்தம் இருக்கும் என அவருக்குத்தான் தெரியும்.

'கால் வைக்க இடமில்லை'

கேசவன், வேலுசாமிபுரம், கரூர்: கூட்டம் நடத்தும் அளவுக்கு இது விசாலமான இடம் கிடையாது. தி.மு.க., முப்பெரும் விழா நடத்திய இடத்தில் 50 ஏக்கர் உள்ளது. அங்கு நடத்தியிருக்கலாம். விஜய்க்கு இடம் கொடுக்கவில்லை என்கிறார்கள். எந்த அளவுக்கு உண்மை எனத் தெரியவில்லை. இந்த அளவுக்கு கூட்டம் வரும் என விஜய் எதிர்பார்த்திருக்க மாட்டார். காவல்துறை கணித்திருக்க வேண்டும்.இங்கு இதுவரை ஏராளமான கூட்டம் நடந்துள்ளது. அருகில் இருந்தாலும் நான் வந்ததில்லை. விஜய் வருவதால் வந்தேன். என்னைப் போல் நிறைய பேர் வந்திருப்பார்கள். அதை விஜயாலோ, கட்சியாலோ கணித்திருக்க முடியாது. கட்சி நிர்வாகிகளும், கூட்டம் அதிகரித்தால் என்ன செய்வது என யோசித்து, செய்திருக்க வேண்டும். 6 மணி வரை ஒரு கி.மீ., வரை ஓரளவு கூட்டம் இருந்தது. விஜய்க்கு பின்னால் வந்து கொண்டிருந்த கூட்டம் சேர்ந்தபோது, கால் வைக்கக்கூட இடமில்லாமல் போனது.மற்ற தலைவர்கள் அடிக்கடி வருகின்றனர், அவர்கள் வரும்போதே, வாகனத்தின் மேலே இருந்து கைகாட்டிக் கொண்டே வருவர். அவர்களைப் பார்க்கும் கூட்டம் அங்கேயே நின்று விடும். விஜய் வாகனத்துக்குள் இருந்தார்; கை காட்டவில்லை. அதனால், மக்கள் ஒரே இடத்தில் குவிந்து விட்டனர்.பெண்கள் மயக்கமடைந்து விட்டனர். அவர்களைத் துாக்கிச் சென்றனர். ஆம்புலன்ஸுக்காக வழிவிட்டபோது, கூட்டம் விலக ஆரம்பித்தது. ஆனால், இடம் போதவில்லை. மின்சாரமும் இல்லாததால், கீழே விழுந்தவர்களை, நிற்பவர்களால் பார்க்க முடியவில்லை.விழுந்தவர்கள் மீது ஏறி மிதித்துச் சென்று விட்டனர். துாக்கிச் செல்லப்பட்டவர்கள் மயக்கத்தில் இருந்து எழுந்து விடுவார்கள் என நினைத்தோம். பிறகு 'டிவி' பார்த்தபோதே நிறைய பேர் இறந்தது தெரியவந்தது.உள்ளூர்க்காரர்களுக்கு வழி தெரியும். இருட்டில் வெளியூர்காரர்களுக்கு வழி தெரியாமல் மாட்டிக் கொண்டனர்.

'பாதுகாப்பு குறைவை ஒளிபரப்பி இருக்கலாம்'

கேசவன், ஆத்துார்: காலையில் இருந்தே ரசிகர்கள், ஆட்டம் பாட்டத்துடன் இருந்தனர். மாலை நேரத்தில் வேலையில் இருந்து திரும்பியவர்கள் வீட்டுக்குச் செல்லாமல், இங்கேயே நின்று விட்டனர். இதனால், கூட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருந்தது.காலை கூட நகர்த்த முடியவில்லை. ஆம்புலன்ஸ் வரும்போது விலக இடமில்லை. தண்ணீர் இன்றி மக்கள் தவித்தனர். விஜய் பேச ஆரம்பித்ததும் கூட்டம் நெருக்கியடித்தது. தள்ளுமுள்ளு ஏற்பட்டு, மக்கள் கீழே விழ ஆரம்பித்தனர். 500 பேர் நிற்கும் இடத்தில் 2,000 பேர் நின்றிருந்தனர்.மின்சார ஷாக் அடிக்குது என தகவல் வந்ததும், மின்சாரம் கட் செய்யப்பட்டது. மக்களின் பதற்றம் அதிகரித்தது. கையில் குழந்தை வைத்திருந்தவர்கள் என்ன செய்வது எனத் தெரியாமல் பதறினர். தள்ளுமுள்ளு அதிகரித்து, இருட்டில் எது எங்கிருக்கிறது எனத் தெரியாமல் விழ ஆரம்பித்து விட்டனர்.500 போலீசார் இருந்ததாகக் கூறுகின்றனர்; உண்மையில், 50 பேர் இருந்திருக்கலாம். ஊடகத்தினர் அப்போதே கூட்டம் அதிகம் இருக்கிறது, பாதுகாப்பு குறைவாக இருக்கிறது என ஒளிபரப்பி இருந்தால், மேலிடத்தில் இருந்து பாதுகாப்பை அதிகரித்திருப்பார்கள்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை