உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  காற்றாலை மின்சாரம் அதிகரிப்பு; மின் தேவை டென்ஷன் குறைவு

 காற்றாலை மின்சாரம் அதிகரிப்பு; மின் தேவை டென்ஷன் குறைவு

சென்னை: தமிழகத்தின் பல மாவட்டங்களில், கடந்த சில தினங்களாக மழை பெய்வதுடன், காற்றாலை மின்சாரமும் அதிகம் கிடைப்பதால், 1,000 முதல், 3,000 மெகா வாட் மின்சாரத்தை, மின் வாரியம் விற்பனை செய்துள்ளது. தமிழகத்தில் இம்மாதம் தினமும் சராசரியாக, 16,000 மெகா வாட்டாக இருக்க வேண்டிய மின் தேவை, 20,000 - 21,000 மெகா வாட்டாக இருந்தது. காற்றாலை மின் நிலையங்களில் இருந்து, கடந்த மாதம் வரை, தினமும் சராசரியாக, 4,000 மெகாவாட் மின்சாரம் கிடைத்த நிலையில், இம்மாதம் 1,000 மெகா வாட்டாக குறைந்தது. மின் பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில், மின்சார சந்தையில், மின்சாரம் விலை அதிகமாக இருந்தது. இதனால், மின் கொள்முதல் செய்யப்படாமல், சென்னை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில், தினமும் ஒரு மணி நேரம் மின் வெட்டு செய்யப்பட்டது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து, அரசின் அறிவுறுத்தலின் அடிப்படையில், மின்சார சந்தையில், 3,500 மெகா வாட் மின்சாரத்தை, மின் வாரியம் கொள்முதல் செய்தது. இந்நிலையில், திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில், நேற்று முன்தினம் முதல் மழை பெய்து வருகிறது. இதனால் மாநில மின் தேவை, பகலில் 16,500 மெகா வாட், காலை மற்றும் மாலையில் இருந்து இரவு வரை, 18,000 மெகா வாட்டாக குறைந்துள்ளது. மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த இரு தினங்களாக, மின் தேவை குறைந்துள்ளதுடன், காற்றாலைகளில் இருந்து, மீண்டும் 4,000 - 5,000 மெகா வாட் வரை, அதிகளவில் மின்சாரம் கிடைக்கிறது. இதனால் பகலில், 1,000 மெகா வாட் முதல், 3,000 மெகா வாட் வரை உபரியாக உள்ளது. இந்த மின்சாரம், மின்சார சந்தையில் விற்கப்படுகிறது. ஒரு யூனிட் விலை சராசரியாக, 5 ரூபாய் - 10 ரூபாய் வரை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Vasan
செப் 23, 2026 07:16

ஆம், சென்ற வாரம் அன்றாட காற்றாலை மின் உற்பத்தி 2 கோடி யூனிட்டாக குறைந்திருந்த நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை மீண்டும் அதிகரித்து 10.33 கோடி யூனிட் உற்பத்தியானது. தமிழக மின்சார தேவையும் தினசரி சராசரி 41 கோடி யூனிட்டிலிருந்து 38 கோடி யூனிட்டாக குறைந்துள்ளது. இது செலவு 3 கோடி குறைந்து, வரவு 8 கோடி அதிகரித்ததற்கு சமம். ஆந்திர கடலோரத்தில் நிலவும் காற்றழுத்த தாழ்வால், தமிழகத்தின் வழியே மேற்கத்திய காற்று இழுக்கப்படுவதால் இது சாத்தியமாயிற்று. முடிந்து போன காற்று சீசனுக்கு இது புத்துயிர் கொடுத்துள்ளது. இந்த வார இறுதி வரை நிலைமையை சமாளிக்கலாம்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை